பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

படுத்தி கடத்துவதற்குரிய ஆணையாளர் நியமிக்கப் பெற்றிருந்தனர். துறைமுகங்களைக் கண்கானிக்கவும், கடல் வாணிகத்தைப் பெருக்கவும் வழிகோலப்பட்டது. தலைநகரான பாடலியுடன் பல இராச்சியங்களும் நெருங்கிய தொடர்பு கொள்ளவும், வாணிகம் பெருகவும், படைகளின் நடமாட்டத்திற்கு உதவவும் பெருஞ் சாலைகள் பல அமைக்கப்பெற்றன. இடையிடையே யாத்திரிகர்கள் தங்குவதற்குரிய விடுதிகளும் நிறுவப்பட்டன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்ததால், ஆடம்பரப் பொருள்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. ஆடல், பாடல், நாடகங்கள் முதலியவைகளும் பெருகி வளர்ந்தன.

இத்தனை வெற்றிகளும் சந்திரகுப்தரின் இருபத்தைந்து ஆண்டு ஆட்சியில் ஏற்பட்டதைப் போன்ற நிகழ்ச்சியை வரலாற்றில் காண்பது அரிது. பேரரசுத் தேவதை மூடனிடம் நெடுநாள் தங்கியிராது; அது பயங்கொள்ளியைப் பார்த்ததும் பரிகசித்து நீங்கும்; வீரன் ஒருவனுக்கே அஃது அடங்கிக் கிடக்கும் என்பர். சந்திரகுப்தர் அத்தகைய வீரராயிருந்ததால், அவரிடம் பேரரசு நிலைத்து நின்றது. அத்துடன் அவருக்கு ஆலோசனை கூறி ஆட்சிபுரிய உதவிய அமைச்சர் நுண்ணறிவு, வன்மை, அன்பு ஆகியவைகளிலே சிறங்து விளங்கிய சாணக்கியர். அவர் இடம், பொருள், ஏவல் எல்லாவற்றையும் ஆராய்ந்து, தக்க சமயத்தில் தக்க உபாயம் கூறி வந்ததாலும், அதனை ஏற்றுச் சந்திரகுப்தர் நிறைவேற்றி வந்ததாலும், அவரது ஆட்சி மிக உயர்ந்த நிலையை அடைந்தது.