பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வாழ்க்கை என்றில்லாமல், மக்கள் ஒழுக்கத்திலும் சிறந்து, உன்னதமான இலட்சியப் பாதையில் உறுதியுடன் வாழ வேண்டும் என்றே பெற்றோர் எண்ணுவர். அங்ஙனமே அவரும் எண்ணியிருந்தார். ஒரு கல் வெட்டில், “தாழ்ந்தவர்களும் பெரியோர்களும் இடைவிடாது முயற்சி செய்க” என்று அவர் குறித்துள்ளார். வாழ்க்கையின் இலட்சியங்கள், வாழும் முறைகள் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவு புகட்ட முன் வந்த முதல் அரசர் அவரே யாவார்.

மக்களுக்கு அசோகர் புகட்ட விரும்பிய அறநெறி சாதாரணமானதுதான். தாய் தந்தையரைப் பேணுதல், குருவைப் போற்றுதல், எல்லோரிடத்திலும், எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்பாயிருத்தல், பாவங்களுக்கு அஞ்சி ஒதுங்குதல், இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெற உழைத்தல் முதலிய அறங்களையே அவர் எடுத்துக் கூறியுள்ளார். இவை எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானவை. ஆயினும் இவற்றில் இடைவிடாது முயற்சி செய்யவேண்டும் என்பது அவர் விருப்பம். அவர், ‘முயற்சி செய்க’ என்று எழுதியிருக்கும் இரு சொற்களும் பொருள் பொதிந்தவை. புத்தர் பெருமானின் அறவுரைகளில் நன்றாக ஊறியிருந்த அவருடைய உள்ளத்திலிருந்து வெளிவந்த சொற்கள் அவை.

புத்தர் மனமாசுகளை நீக்கி, நல்லெண்ணங்களை வளர்க்கச் சொன்னார். ‘நல்லதை விரைவாக நாட வேண்டும்; பாவத்திலிருந்து சித்தத்தை விலக்க வேண்டும். அறச்செயலைச் செய்வதில்