பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

அனுப்பிவைத்தார். அசோகர் கலகத்தை எளிதில் அடக்கி, மக்களின் குறைகளை விசாரித்துப் பரிகாரம் கண்டார். பின்பு அவரே அங்குச் சிறிது காலம் அரசப்பிரதிநிதியாக இருந்து ஆட்சி புரிந்தார். இளம் வயதில் தட்சசீல வாழ்க்கை அவருக்கு மிகவும் பயன்பட்டிருக்க வேண்டும்.

கல்வி கேள்விகளுக்குப் புகழ் பெற்ற இடம் தட்சசீலம். மேலும் மேற்குப் பக்கத்து நாடுகளுடன் தொடர்பு கொள்ள அதுவே தலைவாயிலாகவும் விளங்கிற்று. அங்கிருந்த பல்கலைக் கழகம் ஆசியா முழுதும் புகழ்பெற்றது. மோரியர் ஆட்சியில் தட்சசீலம் மிகப் பெரிய வாணிகத் தலமாகவும் விளங்கி வந்தது. மோரியருக்கு முன்னர் அது சுதந்தர நாடாயிருந்ததால், மக்கள் புதிய ஆட்சியில் மனக் குறை கொள்வது இயல்பாகும். அத்தகைய குறைக்கு இடமில்லாமல், அசோகர், வெறும் படையை மட்டும் நம்பியிராமல், மக்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.

பின்னர் அவர் மேற்கு மாநிலமான மாளவ இராச்சியத்தின் தலைநகரான உச்சயினியில் அரசப் பிரதிநிதியாக இருந்தார். அந்நகரும் வாணிகத்தில் செல்வம் கொழிக்கும் நகராகத் திகழ்ந்தது. அங்கேயிருந்த காலத்தில், அசோகர் தேவி என்ற வைசியப் பெண்ணைக் காதலித்து, அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார். தேவியின் குழந்தைகளே மகேந்திரனும் சங்கமித்திரையும். தேவி பெளத்த தருமத்தில் மிகுந்த பற்றுடையவள். அவளது முயற்சியாலேயே அசோகர் புத்த தருமத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்து