பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

களைக் கொண்ட குதிரைப் படையும், 700 பேர்களைக் கொண்ட களிற்றுப் படையும் நிரந்தரமாக இருந்து வந்தன. ஆனால், போர்க் காலத்தில் இவை பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். மகதப்பேரரசரே படையெடுத்து வந்து முற்றுகையிட்ட போதிலும், கலிங்க மன்னன் கலங்காது எதிர்த்து நின்றான்.

நீண்ட காலம் முற்றுகையும் போர்களும் நடந்த பின், கலிங்கத்திலே பட்டினியும் பஞ்சமும் பெருகிவிட்டன; களங்களிலே மோரியப் படையால் கலிங்கர்களில் இலட்சம் வீரர்கள் வதைக்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர் என்று அசோகரின் கல்வெட்டுக்களிலிருந்து தெரிகின்றது. போரினால் மக்களிலே எத்தனை இலட்சம் பேர்கள் வீடிழந்து, நிலமிழந்து, உற்றார் உறவினரை இழந்து தவித்திருப்பார்கள் என்பதை நாமே சிந்தித்துக் கொள்ளலாம். மேலும் மோரியப்படையினர், நாட்டைத் தீ வைத்து எரிக்காவிட்டாலும், மறையவர், பெண்டிர், முதியோர், குழந்தைகள் என்றுகூடப் பாராமல் வதைத்துவிட்டனர்.

பண்டைக்காலப் போர்களிலே ‘சேனை தழை யாக்கி, செங்குருதி நீர் தேக்கி, ஆனை மிதித்த அருஞ்சேறு’ நிறைந்திருக்கும் என்பதை நாம் நூல்களிலே காண்கிறோம். எனினும் தமிழ் மன்னர் படையெடுத்துச் செல்லுகையில், பசுக்கள், அந்தணர், பெண்கள், பிணியாளர் முதலியோரைப் போர் நிகழும் இடத்திலிருந்து வெளியேறிவிடும்படி எச்சரிக்கை செய்த பிறகே போரிடுவர். போர்க்