பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

என்றால், அதற்குத் தேவையான சூழ்நிலைகளை அவர் அமைத்துக் கொண்டதாலேயே அது முடிந்தது. அவருக்கு அடுத்தாற்போல் அவருக்குப் பிரதிநிதிகளாக நான்கு மாநிலங்களில் நான்கு இளவரசர்கள் நியமிக்கப் பெற்றிருந்தார்கள். அவர்கள் வடக்கே தட்சசீலம், நடுவே உச்சயினி, கிழக்கே தொசலி, தெற்கே சுவர்ணகிரி ஆகிய நகரங்களில் தங்கியிருந்தனர். இந்த அரசப் பிரதிநிதிகளுக்கு அடுத்தாற்போல், அவர்களுக்குக் கீழே, இராஜூகர்களும், அவர்களுக்கு அடுத்தபடியில் பிரதேசிகர்களும் நியமிக்கப் பெற்றிருந்தனர். இவ்விருவகை அதிகாரிகளையும் சேர்த்தே 'மகா மாத்திரர்கள்' என்று அசோகர் குறிப்பிட்டிருப்பதாகக் கருதப்படுகின்றது. மகாமாத்திரர்கள் இக்காலக் 'கவர்னர்'களைப் போன்றவர்கள். அவர்களுக்குக் கீழே யுக்தர்கள், உப யுக்தர்கள், மற்றும் பல நிர்வாகிகளும், அலுவலர்களும் வேலை செய்து வந்தனர். அசோகர் ஆட்சியில் அரசாங்க இயந்திரம் எந்தப் பகுதியிலும் தூங்கி விழுந்துகொண்டிராமல் சுறுசுறுப்பாக அரசியலை நடத்தி வந்துள்ளது.

அசோகர், தாம் முடி புனைந்த கொண்ட பதினான்காம் ஆண்டில் தரும மகாமாத்திரர்களையும், அவர்களுக்கு வேண்டிய உதவி அதிகாரிகளையும் நியமித்தார். அவர் சாசனங்களில் விவரித்துள்ள ஒழுக்கங்கள், தருமங்களை, மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கவும், குறைகள் ஏற்பட்டால் திருத்தவும் வேண்டிய பணி அவர்களுக்கு இருந்தது. அரசருடைய குடும்பத்தவர்களையும் அவர்கள்