பக்கம்:அலைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெற்றிக் கண் O 119

 சேலையைச் சரிப்படுத்திக் கொள்ளவோ?

அவனது நெற்றியில் வியர்வை அரும்பிப் பொட்டுப் பொட்டாய் நின்றது. மேலுதட்டைக் கீழ்ப் பல்லால், இழுத்துக் கடித்துக் கொண்டு நின்றான். அவளது உடலின் விறுவிறுப்பும், நடையின் துள்ளலும் அவனது மனத்தில் புகுந்து துடிக்க ஆரம்பித்துவிட்டன. வேதனை சஹிக்க முடியவில்லை. அவளை-

மதம் பிடித்த களிறு ஆகிவிட்டான் கடவுள். அவனுடைய நடையின் வீச்சும் கடிய நேரத்தில், வாவிக்கும் வேய்க் காட்டுக்கும் உள்ள இடைவெளியைக் கடந்தது.

சலசலப்புக் கேட்டு, அவள் சட்டென்று திரும்பினாள். புதர்களை இரண்டு கைகளாலும் விலக்கிக் கொண்டு, கால்களை அகல விரித்து, அழுந்த ஊன்றிய வண்ணம், தலை நிமிர்ந்து, ஆஜானுபாகுவாய் கோவணாண்டியாய் நின்றானவன். புஜங்களிலும் மார்பிலும் தொடைகளிலும், நரம்புகள் புடைத்து விம்மியெழுந்தன. ஒரே செளரிய உருவாய் விளங்கினான் கடவுள். அவனுடைய இரு கண்களும் நெருப்பாய் ஜ்வலித்தன. முதன் முதலாய், அவளது மனதில், அவனது நோக்கிலும் அவன் நின்ற நிலையிலையும் சந்தேகம் பிறந்தது. சாந்தக் கடல்களான, அவளுடைய கண்களில் கொந்தளிப்பு உண்டாகிவிட்டது.

ஓர் அணுவளவு நேரத்தில், துணுக்களவு நேரம், உலக இறுதியின் நிசப்தம்.

'கீச்-கீச்-கீச்-'

எங்கோ ஒரு குருவி அலறியது.

அவள் காதில் ஒரு பயங்கர வெள்ளம் இரைந்தது,

“நீ எவ்வளவு சுந்தரமாய் இருக்கிறாய்!”

“சுவாமி, நீங்கள் இப்படிப் பேசுவது உங்களுக்குத் தகாது. கையிலே ஓடு தாங்கி, இடையில் காஷாயம் பூண்டிருக்கிறீர்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/121&oldid=1288276" இலிருந்து மீள்விக்கப்பட்டது