பக்கம்:அலைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 125


கென்ன? பாபூ, நீ எப்படிடா சொல்லி வெச்சாப்போல கோலத்தை அழிச்சே? நீ உண்டாவதற்கு முன்னேயே அவள் சொன்னதைக் கேட்டிண்டிருந்தியோ? கோலத்தைக் கண்டாலே உனக்கு என்னடா பண்ணித்து? அது உன்னை என்ன சொல்லி அழைச்சுதுடா?”

கோலத்தைக் கண்டால் போதும், தவழ்ந்தோடி வந்து அதன்மேல் உருள்வான். தொப்பையில் கோலத்தின் பதிவைத் தொட்டுத் தொட்டுச் சிரிப்பான். “பாபூ, பாபூ! நீ கோலத்தில் விளையாடி எங்களைக் கோலம் காட்டி, என் கண்ணே, கோலத்திலேயே மறைஞ்சுட்டியேடா!’

'ஷ்ஷ்-'

திடீரெனப் புரியாததோர் சீற்றம் அவளைப் பற்றிற்று, வெறியானாள். திடுதிடுவென ஓடிவந்து, காலால் கோலத்தைப் பரபரவெனத் தேய்த்தாள்.

'கோமதி! கோமதி!!'

ஆனால் அவளுக்கு எங்கிருந்தோ மிருகபலம் வந்து விட்டது. அவன் கட்டிலிருந்து திமிறினாள். வெட்கமும் கோபமும் அவனைப் பிடுங்கின. மூன்றாம்பேர் எதிரில் தன்னோடு மல்யுத்தம்.

'பளீர்!'

சன்னதி அதிர்ந்தது. துரிஞ்சல்கள் மிரண்டு பறந்தன. அவள் ஆவேசம் சட்டென அடங்கிற்று. விழிகள், திகைப்பில் மங்கின. கன்னத்தைத் தடவிக் கொண்டு அவள் அனாதையாய் நிற்பது கண்டு வயிறு ஒட்டிக் கொண்டது. அவன் கண்கள் துளும்பின.

என்னை மன்னிச்சுடு!”

அங்கிருந்து பதில் ஏதுமில்லை.

ஏதேதோ சமாதானம் பேச எடுத்த வாயில் திடீரென வார்த்தைகள் மறந்து போயின; அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/127&oldid=1288283" இலிருந்து மீள்விக்கப்பட்டது