பக்கம்:அலைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 லா. ச. ராமாமிருதம்



திறந்து வார்த்தை வராமல்-இல்லை, ஒருவேளை அதன் பாஷையே அதுதானோ என்னவோ-ஆத்திரத்துடன் கரை மீது மோதியதும் குடம் பால் சரிந்தாற்போல், கரைவரை நுரை-கரை தாண்டிக் கூடி பெரிதாய்ப் பரவி, பெரிதும், சிறிதும் பொடிந்தும் நுரைக் கொப்புளங்கள் தனித்தனியாய், வெய்யிலை வாங்கிக்கொண்டதும், வர்ணங்கள் ஒவ்வொரு குமிழிலும் பிறந்து மிளிர்வது கண்கொள்ள வில்லை. இன்னும் அலுக்கவில்லை.

பொட்டலங்கள் போல் தலைமீது ஒலைப் பின்னல் குல்லாயும், அரையில் கோவனுமுமாய், கரிய உடல் நனைந்து, வெய்யிலில், எண்ணெய்க் காப்பிட்ட மூலவர்கள் போல் பளபளக்க செம்பட வர்கள் கட்டுமரத்தை, சமயம் பார்த்து, பின்வாங்கும் அலைமுகட்டின் மேல் சவாரி தள்ளி, தாங்களும் ஏறுகிறார்கள்.

அலைமீது ஒரு மரத்துண்டு மிதக்கின்றது. அலையோரம் பூமி, அலையின் கடைசல் பிடிப்பில் தேய்ந்து பளபளத்துப் பிம்பங்கள் தேய்ந்து தெரிகின்றன. தென்றலின் அலைப்பில் அலைத் திவலைகள் முகத்தில் விசிறுகின்றன. தலைமயிர், கலைந்து தும்பைக் குவியலாகிவிட்டது. இங்கு வந்தாலே மனத்தின் புத்துயிர்ப்பு உடல் முழுவதும் பரவி, விறு விறுப்பது தெரிகிறது.

“தாத்தா! என்னா சிரிக்கறே?”

“தாத்தா! என்னா தலையாட்டறே?’’

கரையோரம் நண்டு பிடிக்கும், கிளிஞ்சல் பொறுக்கும், காசை வீசியெறிந்தால் அதை மீட்க, அதன் பின்னாலேயே அலையுள் பாயும் செம்படவச் சிறுவர் சிறுமியரின் நையாண்டி. -

“தாத்தா அது என்னா தலை அப்படி லொட லொடன்னு ஆடுதே! களுத்துப் பூட்டு கயண்டுட்டுதா?’’

“தாத்தா நீ பூம் பூம் மாடா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/204&oldid=1285361" இலிருந்து மீள்விக்கப்பட்டது