பக்கம்:அலைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 லா.சா.ராமாமி௫தம்


சாவு அவள் விரும்பவில்லை.

அவளுக்கு எதிலும் விருப்பமில்லை.

என்ன காரணமோ தெரியவில்லை. கலியாணமான பிறகு அவள் தன்னுருக்குப் போக நேர்ந்து, ஒரு நாள் குளத்துக்குக் குளிக்கப் போன இடத்தில், ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியெடுத்த சம்பவம் நினைவு வந்தது. உருண்டையாய் ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவிற்கு வழு வழுத்து, கெட்டியாய்ச் சில்லென்று வெளுப்பாய்.....

அவளுக்கு அப்பொழுது திடீரென்று ஒரு எண்ணம் தோன்றிற்று. அவள் இதயம், அதே மாதிரி ஒரு விதமான உணர்வுமில்லாது உறைந்து போய்விட வேண்டுமென்று, அவளுக்குக் கலியாணமானதிலிருந்து எதைக் கண்டாலும் அவ்வளவு வெறுப்பேற்பட்டது.

இத்தனைக்கும் அவள் கணவன் வெகு நல்லவர் என்று அவளுக்குத் தெரியும். அவள் வார்த்தைக் கெதிர்வார்த்தை சொன்னதில்லை. இருந்தும் அவரைவிட யாரையேனும் அதிகம் வெறுத்தாளெனில், ஊர்வாய்க்குப் பயந்து தன்னை இளையாளாய்க் கட்டிக் கொடுத்துவிட்ட தன் தந்தை தாயைத்தான். எல்லாவற்றையும்விடத் தன்னையே வெறுத் தாள் என்ன. எப்படியென்று சரியாய்த் தெரியாவிட்டா லும், தன்னை ஏதோ கட்டிக் கொடுத்து விட்டாற்போல் அவளுக்கு எல்லோர் மேலேயும் துவேஷம் விழுந்துவிட்டது.

உலகில் பெண்ணாய்ப் பிறந்த ஒரு காரணத்தாலேயே, இத்தனைக்கும் அடிப்படையாயிருக்கும் தன்னையே அவள் வெறுக்கும் பயங்கரம்- இப்பொழுது ஜலத்தடியில் மூச்சுத் திணறுகையில் பளிச்சென்று தெரிந்தது.

வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்டம். தன்னைத்தானே கண்டு பிடிக்காதபடி, தன் உள்தாபத்தைத் தன்னுள் புதைத்துவிட வேண்டும். அப்பொழுதுதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/30&oldid=1284277" இலிருந்து மீள்விக்கப்பட்டது