பக்கம்:அலைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 O லா. ச. ராமாமிருதம்'

 ஆனால் அது அதன் குரலாகவேயில்லை. பூமியையே மட்டை உரித்தாற் போன்ற ஒரு கோர சப்தம். மலைச்சரிவிலிருந்து பாறைக் கற்கள் ஒன்றிரண்டு எதிரொலியில் உதிர்ந்தன.

காளையின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. செழித்து ஓங்கிய பேய்ப் புற்களின் ஊடே, காற்றின் சீறல் செவியில் மோதிற்று, காளையின் வயிறு முதுகோடு ஒட்டிக்கொண்டிருந்தது.

திடுதிடும் திடுதிடும் திடுதிடும்.

பூமியின் தாகத்தையே தணிக்க விரைவது போலும் மலையிலிருந்து அருவி இறங்கும் சப்தம். காளைக்கு நாக்கு வீங்கித் தடித்து, பாம்பு போல் சுருண்டு தொண்டையை அடைத்துக் கொண்டது.

இந்தப் பரிகாசம் காளைக்குப் புரியவில்லை. வெகுண்டு மற்றுமொரு முறை தன்னை விடுவித்துக் கொள்ளத் தன் முழு வன்மையோடு தவித்தது. அதன் ரத்தத்தில் மறைந்து பாயும் கோடி கோடி காளை ஜன்ம வித்துக்களும் அப்பவே அத்தனையும் முளைக்கத் துடிப்பது போலும் குதித்துக் கொதித்து எழுந்தன. ஆனால், பாறைகளின் எமப்பிடி தளரவில்லை. அதை அழுத்திப் பிடித்துக் கொண்டு, அதன் வேளைக்கு அவை அசைவற்று காத்துக் கொண்டிருக்கும் தன்மையிலேயே ஒரு விரக்தியான சிரத்தையும் இரக்கமின்மையும் தெளிவாயிற்று. இப்படித்தான் பூமியில் பொருள் எனத் தோன்றியவை எல்லாம் -அசைவனவோ அசையாவனவோ, தாம் உணர்ந்தோ உணராமலோ, இஷ்டப்பட்டோ படாமலோ-தம்தம் பொருட்டை நிறைவேற்றி வரும் நியதி காளைக்கு உரைக்கையில் அதன் கண்களுக்கெதிரே பட்டப் பகலில் இருள் தூலங்கள் மாறி மாறிப் படர்ந்து அதன் மேல் இடிந்து விழ்ந்தன. மறுபடியும் காளைக்கு நினைவு தப்பிப் போயிற்று.

மறுபடியும் கண் திறந்தபோது இரவு இடத்தைப் போர்த்திவிட்டது. பூமியில் பூக்கள் சிதறிக் கிடப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/70&oldid=1287259" இலிருந்து மீள்விக்கப்பட்டது