பக்கம்:அலைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 O லா. ச. ராமாமிருதம்



ரவிக்கை சரியா? என்பது முதற்கொண்டு- எனக்கே தெரிந்தாலும், உங்களைக் கேட்டுகொள்வதில்தான் எனக்கு சந்தோஷம்; என் வாழ்க்கையின் நிறைவு. என் சாபம், என் விமோசனம் இரண்டுமே, எல்லாமே நீங்கள் தான்! உங்களிடம் நான் ஒன்றும் ஒளிக்கமாட்டேன்.

"உங்களிடம் ஒண்னு சொல்லப் போறேன்; சின்ன விஷயம்தான். உங்களிடம் சொல்லாமலிருந்தால், என் நெஞ்சில் பொத்துக்கொண்டேயிருக்கும். அதற்கு நான் இடம்விடப் போவதில்லை. அண்டாப் பாயஸத்தில் ஈ விழுந்த மாதிரி, நம்மிடையில் அந்த ஈயின் கால் அளவிற்குக் கூடச் சிறு ரகஸ்யம், என்னை உங்களிடமிருந்து ஏன் பிரிக்கணும்? நான் இடம்விடப் போவதில்லை-நீங்கள் இப்போ குறுக்கே பேசாதேயுங்கள். அப்புறம், அப்புறம்...

விமலாவின் கணவரை ஏற்கெனவே நான் அறிவேன். மூணு வருஷங்களுக்கு முன்னால் ஏதோ பாலம் கட்டுவதை மேற்பார்வையிட எங்கள் ஊருக்குக் காம்ப் வந்திருந்தார். அந்தப் பட்டிக்காட்டில் ஹோட்டல் வசதி கிடையாது. யாராவது வந்தால், யாராவது இடம் கொடுத்துத்தான் ஆகணும். எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார்.

"காலையில் போனால் மறுபடியும் இரவுதான் வருவார். மத்தியானச் சாப்பாடு, ஆள் வந்து எடுத்துக்கொண்டு போவான். இரவு சாப்பிட்டுவிட்டு, அப்பாவும் அவரும் திண்ணையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அப்படியே உடம்பை நீட்டி விடுவார்கள்".

“அப்பாவுக்குப் பேச ஆள் அகப்பட்டால் போதும்; தான் பிறந்தது, வளர்ந்தது, வாழ்க்கையில் சரிந்தது... வியாதிக்காரனானது, கிராமத்தில் தானே பள்ளிக்கூட வாத்தியார், தானே போஸ்ட்மாஸ்டர், மணியக்காரருக்கு மந்திரி, ஊர்க் கட்சி வழக்குகளுக்கு மத்யஸ்தர் எல்லாமாயிருப்பது, ஐந்து பெண்களைப் பெற்று அவஸ்தைப்படுவது-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/96&oldid=1288252" இலிருந்து மீள்விக்கப்பட்டது