பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


விட்டான். துாற்றல்களும் கேலிப்பேச்சுகளும் அவனை அரைமனிதனாக்கி விட்டன. மனிதமனம் கூட ஒரு வகையான உலோகம் போன்றதுதான். நெருப்பிலே வாட்டினால் அது எப்படி உருகிவிடுகிறதோ அதுபோலத்தான் துன்பத்தால் தாக்குண்டால் மனித மனமும் கருகிவிடுகிறது.

கண்ணாத்தாள் பதினைந்து நாட்கள் தன்னோடு இல்லாதது, உலகத்தில் எல்லோரும் அவனைக் கைவிட்டு விட்டதைப்போல் கண்ணப்பனுக்குப்பட்டது. பைனான்சிங் கம்பெனிக்கு அவன் ஒழுங்காகப் போகவில்லை. தினசரி வசூலை முறையாகக் கவனிக்கவில்லை, கடை , வரவு செலவில் அவன் கவனம் சிறிதும் நாடவில்லை. வெளியூரில் படிக்கும் மாணவன் ஒவ்வொரு நாளும் பெற்றாேர்களிடமிருந்து பணம் வருகிறதா என்று தபால்காரனை எதிர்பார்த்திருப்பதைப் போல கண்ணப்பன் ஒவ்வொரு நாளும் கண்ணாத்தாளின் வரவை எதிர் பார்த்திருந்தான்.

அன்று எதிர்பாராத வகையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அது கண்ணாத்தாளின் தகப்பனர் எழுதியது. தனக்கு உடல் நலமில்லாததால் கண்ணாத்தாள் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஊரில் இருந்து விட்டு வரட்டும் என்று தான் தனது மாமனர் எழுதியிருப்பார் என்று கண்ணப்பன் நினைத்தான். ஆனால் அந்தக் கடிதம் ஒரு பயங்கரமான வெடி குண்டோடு வந்திருந்தது. கடிதத்தைப் படித்ததும் அவன் தலைசுற்றியது.

"அன்புள்ள மாப்பிள்ளைக்கு, எப்போதும் காணாத மகிழ்ச்சியோடு நான் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். பல வருஷங்களாக நான் கும்பிட்ட தெய்வங்கள் என்னைக் கைவிட்டு விடவில்லை. ரதிக்கிளி போன்ற என் மகள் ஊரார் பேச்சுக்கு ஆளாகி விட்டாளே என்று நான் ஒவ்வொரு நாளும் கடவுளை நிந்தித்துக் கொண்டிருந்தேன். எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டல்லவா? அந்த முற்றுப்புள்ளி இப்போது என் மனக் கவலைக்கும் வந்துவிட்டது. நீங்கள் மலையாள தேசத்திற்குப் போன முகூர்த்தமாகக் கண்ணாத்தாள் கருவுற்றிருக்கிறாள். அங்கே உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நீங்கள் நேரில் சென்று காணிக்கை செலுத்த வேண்டும்.

கண்ணாத்தாளின் திருமணத்திற்குப் பிறகு என் வீட்டில் நடக்கப்போகும் பெரிய விசேஷம் கண்ணாத்தாளுக்கு நடைபெற இருக்கும் வளைகாப்பு விழாதான், அதற்கு நாள் குறிப்பதற்கு உங்கள் அபிப்பிராயத்தை அறியத்தான் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். ஐந்தாவது மாதத்தில் அல்லது ஏழாவது மாதத்தில்தான் வளைகாப்பு நடத்துவது வழக்கம். உங்கள் விருப்பம் அறிந்துதான் விழாவிற்கு தேதி குறிப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,

இப்படிக்கு.
நாராயணன் செட்டியார்.”