பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

 இந்தக் கோயில் இந்து அறநிலயத் துறைக்குக் கட்டுப்பட்டதென்றாலும், சிவகங்கை சமஸ்தானத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வந்தது.   இந்தத் தெய்வத்திற்கும் நிறைய அணிமணிகள் உண்டு! வைகாசி விசாகம் புகழ் பெற்றது. விசாகத் திருவிழாவை நாட்டுக் கோட்டை வம்சத்தார் தங்களுக்குக் கிடைத்த தேசீயத் திருவிழாவாக எண்ணி வீட்டுக்கு வீடு விருந்து வைத்து ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள்.

 இந்த ஊரில் கூரை வீடுகளைவிட கெட்டியான மச்சு வீடுகளே அதிகம். பெரும்பாலானவர்களுக்கு வெளி நாட்டு வியாபாரம். சிலருக்கு பர்மாவிலே வட்டிக்கடை வேறு சிலருக்கு சிங்கப்பூரிலே ஜவுளிக்கடை, மிகுதிப் பேருக்கு சுமித்ரா, ஜாவா பகுதிகளில் கமிஷன் கடைகள்.

 நாளடைவில் பர்மா சுதந்திரம் அடைந்தது. பர்மாவின் எழுச்சி, அங்கு வாழ்ந்த தமிழர்களின் தொழிலுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக அமைந்து விட்டது. அதனால் பர்மா தமிழர்கள் வாழ்க்கையில் நொடித்துப் போனார்கள். பர்மா பணம் இந்தியாவிற்கு அனுப்புவது தடை செய்யப்பட்டது.

 இதனால் தமிழ் நாட்டிலுள்ள சிங்கப்பூர் கடைக்காரர்கள் வாழ்விழந்த பர்மாக் கடைக்காரர்களை ஏளனமாகக் கருதினார்கள், சிங்கப்பூர் கடைக் காரர்கள் கை ஓங்கியது. மேலும் மேலும் அவர்கள் சொத்துக்களே வாங்கிக் கொண்டே வந்தார்கள். அதற்கு நேர்மாறாக பர்மாக்கடைக்காரர்கள் குடியிருந்த வீடுகளையே இடித்து விற்கத் தலைப்பட்டார்கள். மிகவும் கஷ்டப்பட்டு பர்மாவிலே இருந்து கொண்டுவந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட வண்ண வண்ண தேக்குமர உத்திரிங்களைக் கொண்ட வீடுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து விட்டன. சிங்கப்பூர் கடைக்காரர்கள் மலிவாக அவைகளை வாங்கி புதிய மோஸ்தரில் வீடுகளைக் கட்டினார்கள்: புதிய கார்கள் வீட்டுக்கு வீடு நின்றன. பாவம், பர்மாக் கடைக்காரர்கள் பல்லுப் போன பழைய காலத்துப் பந்தயக் குதிரைகளைப் போல மனமொடிந்து போனார்கள். தாங்கள் பர்மாவில் இருந்தோம், வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாக அவர்கள் தங்கள் கைகளில் ஒரு பவள வேரையும், காலில் மரக்கட்டைச் செருப்பையும் தான் அணிந்திருந்தார்கள்.

 ஒரு காலத்தில் ரங்கோன் மொகல் ரோட்டில் மூன்றடுக்கு மாளிகையில் வாழ்ந்தவர்கள் இன்று கோயிலூரில் அதே கல்மண்டபத்தில், மேல்துண்டைச் சுற்றித்தலையணை யாக்கி வைத்துக் கொண்டு தாங்கிக்கொண்டிருந்தார்கள்,