பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 இதைவிட கோயிலுருக்கு இன்னொரு துர்பாக்கியம் ஏற்பட்டு விட்டது. செல்வ நிலையை யொட்டி, அந்தக் கிராமம் செயற்கையாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விட்டன. ஒரு பகுதியில் சிங்கப்பூர் கடைக்காரர்கள் புதிய வீடுகளிலும் அடுத்த பகுதியில் பர்மாக் கடைக் காரர்கள் அவர்களது பூர்வீக வீடுகளிலும் வாழ்ந்து வந்தார்கள். இதனால் வெளியூர் வியாபாரிகள் யாரும் பர்மாக்கடைக்காரர்கள் இருக்கும் பழைய வலவிற்கு வருவதில்லை. காய்கறிக்காரன், மளிகைக் கடைக்காரன், உப்பு வண்டிக்காரன் உட்பட எல்லோருமே புதிய வல விற்குத்தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். பழைய வலவிலே இருந்த பர்மாக் கடைக்காரர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை.


வாழ்க்கையில் என்னதான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் உறவும், உரிமையும் அழிந்துபோய் விடுமா? தாய்மாமன், சகோதரி, சம்பந்தி என்ற உறவு முறை அற்றுப்போய்விடாதல்லவா? ரத்தபாசம் என்பது சமையலறையில் பிடித்த கரிமாதிரி! எத்தனைமுறை சுண்ணாம்படித்தாலும் சுவரில் படிந்து போயிருக்கும் புகைக்கரியை மாற்றவே முடியாது!


தமிழ் ஆராய்ச்சியில் கற்றுத் தேர்ந்த கண்ணப்பனுக்கு இது தெளிவாகத் தெரிந்த ஒன்று. பர்மாவின் வீழ்ச்சியினால் அவனது மாமனார் வீடு மிகவும் நொடித்துப் போய்க்கிடந்தது. கண்ணப்பன் திருமணத்தின்போது அவன் மாமனார் வீடு இருந்த நிலை வேறு, இப்போதிருக்கும் நிலை வேறு. நாலு முகப்பு நாராயணன் செட்டியார் என்ற புகழ் அவன் மாமனாருக்கு இருந்தது. ஆம்; நாராயணன் செட்டியார் வீட்டுக்கு நாலு தலைவாசல்கள் இருந்தனவாம்! ஐந்தாண்டு காலத்திற்குள் சர சர வென்று அவர் குடும்பம் சரிந்து விட்டது. அதற்காக அவர் மரியாதையை இழந்து விடவில்லே. மற்றவர்களைப் போல அவர் கோயில் கல்மண்டபத்து வாசியாகி விடவில்லை. கிராமத்திலே விளையும் நெல்லே வைத்து குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.

நாராயணன் செட்டியார், கண்ணாவின் கல்யாணத்தை தடபுடலாக நடத்தினார். நாதசுரக் கச்சேரி முதல் நாட்டியக் கச்சேரி வரை, கண்ணாவின் திருமணத்தை அமர்க்களப் படுத்தின. இன்று நாராயணன் செட்டியார் குடும்பம் நசித்துப் போய் விட்டது என்பதற்காக கண்ணப்பனுக்கும் கண்ணாவுக்குமுள்ள பந்தமும், பாசமும், ரத்தக் கலப்பும் வற்றிப் போய் விடுமா ? .