பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - ஆத்மாவின் ராகங்கள்

திருச்சியில் மெளன ஊர்வலம் ஒன்று மாலையில் நடைபெறுமென்று மலைக்கோட்டையருகே தார் ரோடில் சுண்ணாம்பால் பெரிதாய் எழுதியிருந்தார்கள். கண்ணுக்குத் தெரிந்த மூவர்ணக் கொடிகள் எல்லாம் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. கதர்ச் சட்டையணிந்த ஒருவர் அமைதியாகக் கையை நீட்டிக் காரை நிறுத்தி, என்னுடைய கதருடையைக் கவனித்து என்னிடமும் ஒரு சிறிய கருப்புத் துணித் துணுக்கையும் குண்டுசியையும் நீட்டினார். வாங்கிச் சட்டையில் குத்திக் கொண்டு புறப்பட்டேன்.

மதுரை போய்ச் சேரும் போதே காலை பதினொன்றரை மணியாகி விட்டது. மதுரை நகரமே துயர வீடு போல் களை இழந்து காணப்பட்டது. ஹர்த்தால் அதுவிடித்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வீதிகள் கலகலப்பாக இல்லை. எல்லாக் கடைகளுமே அடைப்பட்டிருந்ததனால் மிகவும் சிரமப்பட்டு ஒரு பூக்கடைக்காரரின் வீட்டுக்குப் போய் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து ஒரு ரோஜாப்பூ மாலையைத் தொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சேவாசிரமத்துக்குள் பெரியவர் உயிரோடிருந்தவரை யாரும் ரோஜாப்பூ மாலைகளோ, வேறெந்த மாலைகளோ கொண்டு போக முடியாது.

'பாரத மாதாவின் கழுத்தில் நாளைக்கு சூட்டுவதற்காக நானே இங்கு ஆயிரத்தைந்நூறு ரோஜாப்பூ பதியன்களை வளர்த்து வருகிறேன்' என்று தமது ஆசிரமத்தின் மாணவ மாணவிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் பெரியவர். ஒவ்வொரு ஆசிரமவாசியையும் ரோஜாப்பதியனாக உருவகப்படுத்திக் கூறும் அவருடைய கவித்துவத்தை வியந்திருக்கிறேன். நான் முதல் முதலாக இன்று தான் தைரியமாக அவருக்குச் சூட்ட ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பெரியவர், மாலைகள் ஏற்பதையும் மரியாதைகள் பெறுவதையும் ஆடம்பரமாகக் கருதி வெறுத்து வந்தார். மாலைக்கு ஆகும் செலவைத் தமது தாழ்த்தப்பட்டவர் கல்வி நிதிக்குத் தரச் சொல்லிக் கேட்பது அவர் வழக்கம்.