பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

59


(மணக்குடவர் உரை) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியையாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

(பரிமேலழகர் உரை) நிலத்தினையாளுந் திருவுடையாற்கு அக்காரியங்களில் விரைவுடைமையும் அவையறிதற்கேற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையுமாகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.

(விரிவுரை) தூங்காமை, கல்வி, துணிவு என்னும் மூன்றும் இல்லாத சோம்பேறி மடக்கோழை எவ்வாறு நாடாளா முடியும்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே!

இங்கே தூங்காமை என்பது. கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதைத் தடுக்கவில்லை. தூங்காமல் இருக்க முடியுமா? சோம்பல் இன்றி, விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் விரைவும் வேகமும் உடைத்தாயிருத்தல் என்பது தான் இங்கே பொருள், உலகில் ஒருவர் விரைந்து வேலை செய்யாமல் மெள்ளச் செய்வாராயின். 'அலுவலகத்தில் அவர் தூங்குகிறார்' என்று 'கேலி' பேசுவது வழக்கம். உண்மையில் அவர் அலுவலகத்தில் படுத்தா தூங்குகிறார்? அவர் படுத்துத் தூங்கவும் இல்லை. நாற்காலியில் சாய்ந்தபடித் தூங்கவும் இல்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் அவ்வளவு வேகமாக - அதாவது ஆமை வேகத்தில் வேலை பார்க்கிறார் என்பது தான் இதற்குப் பொருள். உண்மையில் உறங்கியே விடுகின்ற ஒரு சில (ஊக்கக்காரர்களால் தான் இல்லையில்லை) தூக்கக்காரர்களால்தான் இந்தப் பொல்லாத 'விருது' எல்லார்க்கும் ஏற்பட்டது போலும்! இங்கேயும் இதே கருத்துத்தான்!