பக்கம்:உத்தரகாண்டம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    113

மறுபுறம் மாவில் எரி பூச்சிகள் விழுந்து, பயன் குத்துப்பட்டு, மரம் சோகம் காக்கிறது.

இந்தக் காயில் என்ன பளபளப்பு? சில காய்களில் பொன்னின் மின்னலாய், பருவமடைந்த கன்னியின் பூரிப்பாய் மெருகிட்ட நேர்த்தி. இந்தக் கொல்லையில் இப்படி ஒரு நாரத்தை விளைந்ததாக அவருக்கு நினைவில்லை. முன்பு எப்போதோ எலுமிச்சை காய்த்ததென்று குருகுலம் வீட்டுக்கு வந்ததுண்டு. பெரிய பெரிய சாடிகளில் ஊறுகாய் போடுவார்கள். பிறகு இரண்டொரு இடங்களில் பெரிய பெரிய முட்களுடன் எலுமிச்சையோ, நாரத்தையோ என்று தெரியாமல் செடிகள் முளைத்துப் பெரிதாக வந்து காய்ந்து போயிருக்கின்றன. “இந்தக் கொல்லையில் மாமா காலத்தில் வந்து பட்டுப்போன எலுமிச்சைக்குப் பிறகு அந்த சாதி மரமே வரதில்ல...” என்று அம்மா சொல்லிவிட்டு, நர்சரியில் இருந்து ஒரு சாத்துக்குடிக் கன்று வாங்கி வந்து நட்டார். நட்ட மூன்றாம் வருசமே அது காய்த்தது. உயரவே இல்லை. பரந்து, பின்புறமும் முட்களை நீட்டிக் கொண்டு ஒரு பெரிய இராட்சசி போல் அமர்ந்திருந்தது. வெண்மையாகப் பூக்கள். அது காய்த்தது என்றால், பருவம் கிருவம் என்பதெல்லாம் இல்லாமல் காய்த்துக் குலுங்கிற்று. பறிப்பதுதான் கஷ்டம். அப்போதெல்லாம் இந்த மண்ணாங்கட்டிதான் கூழை உடம்பை வைத்துக் கொண்டு, குச்சியால் கிளைகளை நீக்கிப் பழங்களைப் பறிப்பான்.

யார் வீட்டுக்கு வந்தாலும் சாத்துக்குடி ஜூஸ்தான். “நெல்ல ருசிம்மா!” என்று, பழத்தை உரித்துச் சுவைக்கும் மண்ணாங்கட்டி சந்தோசத்தின் மொத்த உருவமாகத் தெரிவான்.

ராதாம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும். விக்ரம் பையனாக அங்கு வந்த போது, குழந்தையின் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சுவான்.

உ.க.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/115&oldid=1049651" இலிருந்து மீள்விக்கப்பட்டது