பக்கம்:உத்தரகாண்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உத்தரகாண்டம்

1

வாசலில் வண்டி வந்து நின்று கதவு அறைபடும் ஒசை கேட்கிறது. முற்பகல் நேரம். தாயம்மாள் கூடத்தில் மேலே மாட்டப்பட்ட காந்தியடிகள் படத்தை, சிறு மேசையில் ஏறித் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அன்றாடம் அதைத் துடைப்பது, அவளுக்கு ஒரு வழிபாடாக இருக்கிறது. காந்தியடிகளின் படத்துக்குக் கீழே, ஐயாவின் படமும் அம்மாவின் படமும் இருக்கின்றன. அவற்றுக்குச் சற்றுக் கீழே, ராதாம்மாவின் படம்.

இவர்கள் யாரும் இன்று இல்லை. ஆனால் இவர்களுடைய வாழ்நாளின் நினைவலைகள் அவள் உள்ளக் கடலில் மாயவேயில்லை.

அழுக்குப்படியாமல் துடைப்பது மட்டுமே அவள் செய்யும் பணி. பொட்டு, பூ மாலை என்று எதுவும் இல்லை.

அய்யா இருந்த நாட்களில், காந்தி படத்தைக் கையால் நூற்ற நூலினால் மலர்மாலை போல் செய்யப்பட்ட மாலை ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. அய்யா நூற்பதை விட்ட பின்னரும், மதுரை ஆசிரமத்திலிருந்து, ஒவ்வொரு காந்தி ஜெயந்தி நாளிலும் நஞ்சுண்டையா வருவார். பழைய மாலையை எடுத்துவிட்டுப் புதிய மாலையை இசைப்பார். அய்யா, படுக்கையோடு விழுந்தபின், நஞ்சுண்டையா அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார். பேசவே மாட்டார்கள். அய்யா இறந்தபின் உடனே வந்தார். அடுத்த ஆண்டுக்கு அவரும் இல்லை...

மின்னல் கோடுகளாக நினைவலைகளின் தாக்கத்தில் அப்படியே பெஞ்சியின் மீது நின்ற அவள், சட்டென்று இறங்க முயன்று சாயுமுன் இருகரங்கள் அவளைத் தொட்டுத் தாங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/13&oldid=1052086" இலிருந்து மீள்விக்கப்பட்டது