பக்கம்:உத்தரகாண்டம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14

யந்தி டீச்சர் கூடைக்காக வரவில்லை. கொட்டுவதை எல்லாம் திறந்து மடையாக வெளியாக்கிய பிறகு, ‘கூடை’ என்ற காரணத்தை முத்தாய்ப்பாக வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். இங்கேயுள்ள முருகன் கடையில் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வயர் கிடைப்பதில்லை. பெரிய சாலை நெடுக நடந்து, ஆஸ்பத்திரிப் பக்கம் முளைத்துள்ள ஒரு நெருக்கடி பஜாரில், ஒயர், மற்றும் பல்வேறு கை வேலைகளுக்கான பொருட்கள் இருக்கின்றன. பெரிய சாக்கடை பக்கத்திலேயே செருப்புக்கடை, போட்டோ ஸ்டுடியோ, காய்கறி மண்டி, தேங்காய்க்கடை, கண்களைப் பறிக்கும் மஞ்சள், கேசரி கலர்களில் ஜாங்கிரி லட்டு வகையறாக்கள் தெரியும் மிட்டாய்க்கடை... சாக்கடைக்குப் பக்கத்தில், ஒரு நரிக்குறத்தி இடுப்பு- முதுகு ஏனையில் ஒரு பெண்ணுடன் சரம்சரமான மாலைகளைத் தொங்க விட்டுக் கொண்டு போகிறாள். அந்த வரிசையில்தான் அந்தக் கடை இருந்ததாக நினைவு. உள்ளே சந்தை... காய்கறி வந்திறங்கும் லாரிகள் ஆக்கிரமிக்கும் நெரிசல். இல்லாதவர் வாங்கும் துணிக்கடைகள்... அங்கேயே தையல் மிசினை வைத்து வாணிபம் செய்பவர்கள்.

அவளுக்கு எதற்கு வந்தோம் என்ற உணர்வே அழிந்து விட்டாற்போல் இருக்கிறது. ஒரு பெண், சாலையில் பலரக வயர்கூடைகளை வைத்துக் கொண்டு வாணிபம் செய்கிறாள்.

“ஏம்மா, கூடைக்கு வயர் எங்கே வாங்கினீங்க?” அவள் இவள் வினாவுக்கு விடை அளிப்பவளாக இல்லை. அவளைச் சுற்றி இருக்கும் கூடைகளை வாங்க வந்தவர்களிடம் பேரம் பேசுவதில் குறியாக இருக்கிறாள்.

“என்னம்மா, ஒரேயடியா எண்பது ரூபா சொல்லுற...? அம்பதுன்னுதான் நான் போன மாசம் வாங்கினேன். தங்கச்சி ஊருக்கு எடுத்திட்டுப் போயிட்டா... சொல்லிக்குடு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/142&oldid=1049979" இலிருந்து மீள்விக்கப்பட்டது