பக்கம்:உத்தரகாண்டம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146   ✲   உத்தரகாண்டம்


செவிகளில் விழும் செய்திகள், செவிப்பறையைத் துளைத்து, உணர்வுகளைப் பந்தாடுகின்றன.

இந்த பூமியில் எதற்காக இருக்கிறோம் என்று பலவீனம் ஆட்கொள்கிறது. பட்டப்பகலில் நடுவீதியில் இந்தப் பெண் வேட்டை நடக்கிறது. முன்பெல்லாம் அவள் ஒரு தமிழ் தினசரி வாங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்சிமாறும் புண்ணியங்கள், மக்களை ஏமாற்றிப் பதவி பிடிக்கும் சாதுரியங்கள், கட்சி பலம் காட்டும் மாநாடுகள், இவர்களிடையே பந்தாடப்படும் வாக்குறுதிகள், என்ற செய்திகள் தவிர ஆரோக்கியமாக, தெம்பு கொடுக்க, நம்பிக்கை கொடுக்க எந்தச் செய்தியும் இல்லை. மாசம் நூறு ரூபாய் மிச்சம் என்று நிறுத்திவிட்டாள். ஒருபழைய ரேடியோ இருந்தது கையடக்க டிரான்ஸிஸ்டர். காலை நேரத்தில் அதில் செய்திகள் கேட்பாள். வெள்ளிக் கிழமைச் சடங்காக காந்தி பஜனை வரும். அதை எடுத்துக் கொண்டு போன பராங்குசம், ஒரு மிகச்சிறிய டிரான்ஸிஸ்டர், பாட்டரியில் ஓடுவதைக் கொண்டு வந்து வைத்தான். இப்போது அதில் என்ன கோளாறோ, காதடியில் வைத்துக் கொண்டாலும் கேட்பதில்லை. மாடியிலேயே கொண்டு வைத்துவிட்டாள். அவள் நடமாடும் சூழலே செய்திகளாக இருக்கின்றன. இன்று அவள் சாதாரணமாக, யதேச்சையாக, வெளிக்கிளம்பி வந்திருக்கிறாள். எத்தனை செய்திகள்? அவலங்கள்? நடுவீதியில் வேட்டையாடப்பட்ட பெண் யாரோ?

மண்ணாங்கட்டி மூலமாகக் கட்சியில் பிறந்த நாள், இறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படும் போது, பிரியாணி பொட்டலங்களே விழாச் சின்னங்களாக மணம் வீசும். ரங்கனும் இந்தப் பிரியாணி விழாக்களில் ஆதாயம் பெறுவான் என்பது அவளுக்குத் தெரியும். மட்டன் குருமா - ஏ.ஒன். பீஃப், ஸுப் ரெடி என்று ரயில் பாதை யோரம் குடிசைக் கடைகளில் எழுதியிருக்கும். வெட்டித் தோலுரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/148&oldid=1049985" இலிருந்து மீள்விக்கப்பட்டது