பக்கம்:உத்தரகாண்டம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   157


“சந்திரி, உனக்குப் பிடித்தவர் யாரானாலும், நல்லவராக ஒருத்தரை வாழ்க்கைத் துணையாகக் கொள்” என்று அய்யா வாழ்த்தினார். டெல்லி சென்று அங்கிருந்து விமானத்தில் செல்வதாக இருந்தாள். அய்யாதான் நண்பர்களுக்கு எழுதி எல்லா ஏற்பாடுகளையும் செய்ததாக அறிந்தாள்.

“ஏம்மா, மகன் வீடு எப்படி இருக்கு ?”

அம்மா கேட்டார். “எதைச் சொல்ல அம்மா? ஒண்ணும் சரியில்ல. ஆனா, மருமகப் பொண்ணு நல்ல பொண்ணு. கவடில்லாத பொண்ணு. இப்ப மெய்யோ பொய்யோன்னு இருக்கு. அவங்க அம்மா வீட்டுக்கு எழுதிப் போட்டு, அழச்சிட்டுப் போகச் சொல்லுறதான்னு தெரியல...”

“சந்தோசமான சமாசாரம் சொல்ற! இந்தாங்க, சர்க்கரை வாயில் போட்டுக்குங்க!” என்று அம்மா சர்க்கரை வழங்கினார்... ஆனால் இவளுக்கு சர்க்கரை இனிக்கவில்லை.

16

“எம்புள்ளிய எப்படின்னாலும் காப்பாத்தச் சொல்லுங்க தாயி, அவெ அப்படியெல்லாம் நடக்கிறவனில்ல தாயி! காடுகழனி வெள்ளாம இல்லாம, இங்ஙன பஞ்சம் புழைக்க வந்து, பாடுபடுறம். என்னமோ படம் வரயிவா. கடயில வேலை செய்திட்டிருந்தவனக் கூட்டிட்டுப் போயி, படம் நல்லா வரயிறான்னு, வச்சிட்டாங்க. கட்சில சேத்திட்டாங்க. அக்கா தங்கச்சின்னாக்கூட எட்ட இருந்துதா பேசுவா தாயி. அவம் போயி, ரோட்டுல போற பொண்ணப் புடிச்சி இழுத்தான்னு புடிச்சிட்டுப் போயிட்டுது தாயி!”

வீடு துடைத்துக் கொண்டிருக்கும் அவள் திடுக்கிட்டாற்போல் பார்க்கிறாள். அவளுடன் வழுக்கை மண்டையும், குங்குமம் திருநீறுப் பொட்டுமாக ஒரு பெரியவர் நிற்கிறார். எங்கோ பார்த்த நினைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/159&oldid=1050003" இலிருந்து மீள்விக்கப்பட்டது