பக்கம்:உத்தரகாண்டம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166   ✲   உத்தரகாண்டம்


ரஞ்சிதம் செல்வத்தில் வளர்ந்த அப்பாவிப் பெண். கவடு சூது தெரியாது. ஆனால் இவள், அப்படியல்ல - நெளிந்து வளைந்து எகிறித் திமிறி, தன்னிடத்தை உறுதி செய்து கொள்ளும் குணம் படைத்தவள். சில நாட்கள் இரவில் வரமாட்டான். இவனுக்கும் தொண்டர் குழாம், மாலை, பாராட்டு என்று வருபவர் போகிறவர் அதிகமானார்கள். சமையலும் சாப்பாடும் வசதிகளும், பெருகுவதற்கு முன் இவள் கழுத்தில் காதில் மூக்கில், கையில் என்று தேடிக் கொண்டாள்.

“அத்தே, எனக்கு இவுங்க இந்த நெக்லேசு வாங்கி வந்தாங்க! நல்லா இருக்கா, பாருங்க!” என்று காட்டுவாள்.

சில நாட்களில், “அத்தே, ஷீட்டிங் இருக்குதாம். கூப்பிடுறாங்க, நானும் ஊட்டிக்குப் போறேன்”னு தெரிவித்துக் காரிலேறிக் கொள்ளும் அளவுக்கு, இவளுடைய முக்கியத்துவம் மழுங்கிவிட்டது. வாசல் பக்கம் ஒரு கொட்டகை போட்டிருந்தார்கள். சின்னு, பழனி என்று இரண்டு பிள்ளைகள் அங்கே பத்திரிகை அலுவலகம் நடத்தினார்கள். ஒருநாள் இவள் கதவைப் பூட்டிச் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டாள்.

“என்ன தாயம்மா? திடீர்னு வந்திட்ட?”

ராதாம்மா வந்திருந்தாள். “எப்ப வந்தீங்கம்மா? மருமகப்புள்ள வந்திருக்காங்களா?...” என்று கேட்டு, அம்மாவின் காலோடு ஒட்டி நின்ற குட்டிப் பையனைப் பார்த்து, “ராசா... எப்டீருக்கே? தாயம்மா பாட்டிய நினப்பிருக்கா?” என்று கொஞ்சினாள்.

“ஏம்மா, சாமி இல்லன்னு சொன்ன உங்க புள்ள முருக பக்தனாயிட்டான் போல இருக்கு?” என்றார் வந்த விநாயகசாமி, பழைய காலத்துக் கதர்த் தொண்டர். நிறைய கதை கட்டுரை எழுதுவார். புத்தகங்களை மாடியில் கொண்டு வந்து அடுக்குவதும், படிப்பதும் பேசுவதும் வேலை, காந்தி நூற்றாண்டென்று. அதே வீட்டில் வாசலில் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/168&oldid=1050017" இலிருந்து மீள்விக்கப்பட்டது