பக்கம்:உத்தரகாண்டம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    179

சின்னவருதா ஏற்பாடு செய்வாரு... வரன்... வணக்கம் அய்யா. வணக்கம்.” ஒவ்வொரு போலீசு, வாசல்படிக்காவல் எல்லோருக்கும், சலாம், வணக்கம் சொல்லிவிட்டு அவன் வருகிறான். விடுவிடென்று அந்தத் தெரு திரும்பிப் பெரிய சாலைக்கு வருகிறார்கள்.

“பெரி...ம்மா, ஆட்டோ கூப்புடட்டுமா?”

“அட வேணாம்பா, இத ஓரெட்டு, பஸ்சில ஏறினாப் போயி எறங்கலாம்.”

குழந்தைவேலுக்குப் பேசவே அவள் இடம் வைக்கவில்லை.

18

ந்த வருசம் மழைக்காலம் என்று பெய்யவேயில்லை. அவர்கள் கிணறு, கைவிட்டு வாளியில் எடுக்குமளவுக்கு நீர் ஏறும். உள்வரையோடு நிற்கிறது, நீர். மார்கழிக்குளிர் என்று குளிரும் இல்லை. பக்கத்தில் காடாய்க்கிடந்த இடங்களைத் துப்புரவு செய்ய ரங்கனுடன் இரண்டு ஆட்கள் வருகின்றனர். நாரத்தை வேம்பு, கொவ்வைக் கொடிகள், நொச்சி, ஆடாதொடை, கீழாநெல்லி என்று மருந்து தேடுபவர்கள் இங்கே வருவார்கள்.

எல்லாம் இப்போது குவியல்களாகக் கழிக்கப்படுகின்றன. ‘பாம்பு...!’

தப்பி ஓட முயன்ற உயிர்களைத் தடியால் அடித்துக் கொல்கிறார்கள். ஒரு பன்றி அங்கே குட்டிக் குடும்பம் வைத்திருக்கிறது போலும்? அவைகளும் குடுகுடென்று எதிரே அரையும் குறையுமாக நிற்கும் சுவர்களுக்கிடையே ஓடுகின்றன. அந்த அறை சுவர் கட்டுமானங்களை ஒட்டி, பழைய கீற்று, சாக்கு, சிமந்துப்பலகை என்று மறைப்புகளுடன் ஒரு இடம் பெயர்ந்த கும்பல் குடியேறி இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/181&oldid=1050050" இலிருந்து மீள்விக்கப்பட்டது