பக்கம்:உத்தரகாண்டம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190   ✲   உத்தரகாண்டம்

காலம் அதுவும் தெரியாமலே இயலாமலே இருந்தார். கைக் குழந்தையைப் பேணுவது போல் அவள் தொண்டாற்றிய போது, “தாயம்மா, நீ என் தாய், தெய்வம்” என்று விம்முவார். அவளோ, “அப்படி எல்லாம் சொல்லாதீங்கய்யா, என்னைப் பெத்த அப்பனுக்கு நான் செய்யும் கடன் இது. இது செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும்” என்பாள்.

“தாயம்மா, அய்யாவக் கவனிச்சிக்கோம்மா?” என்று அம்மா சொன்ன சொல் ஒலிக்கும்...

‘பராங்குசத்தை சத்தியத்தூண் என்று கபடில்லாமல் நம்பினீர்களே... அதனால்தான் அவன் கனவில் வந்தீங்களா, அய்யா? எனக்கு ஒருநாள் கூடக் கனவில் வரவில்லையே? அவன் கனவில் வந்து, ஆஸ்பத்திரி, விருந்தினர் விடுதி, அமெரிக்கா போல வசதின்னு, அமெரிக்காவை இங்கு கொண்டு வரச் சொன்னீங்களா?... புரியவில்லையே?’

20

மார்கழிக்குளிர் என்பார்கள். எதிரே அரைகுறைக் கட்டிடம் ஒன்றில் ஐயப்ப பூசைக்கு பெரிய பந்தல், தீபாலங்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் தெருவில், பள்ளிக்கூட முக்கிலிருந்து வாழைத் தண்டு விளக்குகள்; முருகன், கணபதியின் தீபக்கோலங்கள் விளங்கும் தோரண வாயில்கள். கருப்பு வேட்டிகள், அச்சிட்ட தாள்கள், ரசீது புத்தகங்கள், உண்டியல்கள், சந்தன குங்குமக் கீற்றுகள், உருத்திராட்சமாலைகளின் பவனிகள் சூழலையே எப்போதும் இல்லாத வகையில் இந்த ஒதுக்குப் புறத்தைக் கலகலக்கச் செய்கிறது.

ஒலி பெருக்கியை இவர்கள் வீட்டுப் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார்கள். தேனினும் இனிய குரலில் வரும் பக்திப் பாடலும் இவளுக்கு நாராசமாக ஒலிக்கிறது. காலையில் வாழை மரங்களைக் கொண்டு வந்து வெட்டி, ‘ஐயப்பன் எழுந்தருளத்திருக்கோயில்’ அமைத்த பிறகு, அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/192&oldid=1050062" இலிருந்து மீள்விக்கப்பட்டது