பக்கம்:உத்தரகாண்டம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    223


இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னே, குடில்ல, மருதமுத்து ரயில் தண்டவாளத்துல தலைகொடுத்தான். நினப்பிருக்கா?

மைதானத்தில் பிள்ளைகளைக் கூட்டிப் பிரார்த்தனை செய்வதில் இருந்து உடற்பயிற்சி மேற்கொள்வது, தேசியகீதம், வந்தே மாதரம் இசைப்பது முதல் அனைத்துச் செயல்பாட்டு ஒழுக்கங்களும் அவன் தலைமையில்தான் நெறிப்படுத்தப்பட்டன. அப்பழுக்குத் தெரியாத உடை; தோற்றம். மாநிறம் தான். அவன் ஒழுக்கக் குறைவானவன் என்று கரும்புள்ளியை வைக்கவே முடியாது...

“ஏன்பா ?”

“சுசீலா தேவியத் தெரியுமில்லையா?”

“தெரியும். ரொம்பத் துவக்க காலத்திலேயே இங்கே வந்து சேந்தாங்க. புருசன் சிறுவயசிலேயே போயிட்டான். ஒரு குழந்தை, மூணு வயசு, அதுவும் நம்ப ஸ்கூலுக்கு வரும். சுசீலாவின் அக்கா, வாரம் ஒருமுறை கூட்டிட்டு வருவாங்க. அம்மாவும் அய்யாயும் கூடக் கொஞ்சுவாங்க. வந்தே மாதரம் நல்லாப் பாடும்...”

“நீங்கல்லாம் குடிலை விட்டுப் போன பிறகு, கபடமில்லாம இருந்த சூழல்ல, ஒரு துரும்பப் பத்த வச்சி எறிஞ்சாங்க. ஒரு தடவை சுசீலா லீவுக்குப் போயிட்டு வந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியல. மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அன்னிக்கு சாயுங்காலம் அவங்கண்ணன் மட்டும் வந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியல. விடுதியிலே இருந்த சரஸ்வதி டீச்சரையும், ஜானம்மா டீச்சரையும் கூப்பிட்டுப் பராங்குசம் விசாரணை செய்தாராம். இதெல்லாம் எனக்குக் கவனமே இல்ல. ஆனா, மாலைப் பிரார்த்தனைக்கு மருதமுத்து வரல. மறுநா காலையிலே சைதாப்பேட்டைத் தண்டவாளத்துல, எக்ஸ்பிரஸ் வண்டிக்குத் தலை கொடுத்திட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/225&oldid=1050162" இலிருந்து மீள்விக்கப்பட்டது