பக்கம்:உத்தரகாண்டம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    233


“அதெல்லாம் வாணாம். அப்ப உங்களுக்கு இப்ப ஆசுபத்திரிக்குப் போக வாணாமா?”

“எனக்கு ஒண்ணும் ஆகாது. ஒரு ஊசி போட்டாச்சி, போதும். அம்பாள் குங்குமமே போதுன்னே, கேக்கல. சரி, நீங்க எங்க போயி என்ன விசாரிச்சீங்க?...”

“எல்லாம் விசாரிச்சேன்... நான் பாவி, பாவி, மன்னிக்க முடியாத பாவி!” என்று தலையில் அடித்துக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு விம்முகிறான்.

பிரும்மசரியம். அது ஒழுக்கம். என்ன ஒழுக்கம்?

“நான் எங்கே போய் இந்த மகாபாவத்துக்குக் கழுவாய் தேடுவேன்? உயர்குன்றில் தீபமாக என்னை நினைத்து இறுமாந்திருந்தேன். குழியில் விழுந்திருக்கிறேன். அந்தத் தீபம் பெருந்தீயாய் என்னைச் சூழ்ந்து கருக்குகிறது. எங்கே போய் இறக்கிவைப்பேன்? காவிப்பட்டு, மஞ்சள்பட்டு, ஸ்படிகம், உருத்திராட்சம், திருநீறு குங்குமம், சந்தனம் எல்லாமே கறை பிடித்துப்போன, சீழ்பிடித்துப்போன சமூக அடையாளங்களாய்விட்டது தாயே, இதைக் கீறி யாரே வைத்தியம் செய்யப் போகிறார்கள்? தீவிரவாதிகளா? வெடி குண்டுக் காரர்களா?...

“கடைசி காலத்தில் பாபுஜியிடம், அமெரிக்கப் பத்திரிகைக்கு ஃபோட்டோ எடுக்கும் பெண் ஒருத்தி வந்து கேட்டாளாம். அணுகுண்டு வந்துவிட்டது; உங்கள் அஹிம்சை நெறி தாக்குப் பிடிக்குமா என்றாளாம். உண்டு - அணுகுண்டைப் போட வருபவன், கடைசி நிமிடத்தில் மனம் மாறிவிட முடியும. அணுகுண்டைவிட அஹிம்சை சக்தி வாய்ந்தது என்றாராம். அன்று மாலையே, அவரைச் சுட்டுப் பொசுக்கிவிட்டோம்...”

முதல் நாள் மண்ணாங்கட்டியாகிய குழந்தைவேலு, காட்டிய சோகமுகத்துக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/235&oldid=1050233" இலிருந்து மீள்விக்கப்பட்டது