பக்கம்:உத்தரகாண்டம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276   ✲   உத்தரகாண்டம்


“இதபாருங்க, இவதான் கன்னிம்மா. உங்களுக்கு என்ன தேவைப்படுதோ அத இவ கிட்டச் சொல்லுங்க. உங்களுக்கு இவ ஒரு பேத்தி...” அழுந்த வாரிய பின்னலும், ஒரு பூப் போட்ட மஞ்சள் வாயில் சேலையுமாக பளிச்சென்று இருக்கும் பெண், கை குவிக்கிறாள்.

“இவங்க யாரு தெரிமில்ல? எம்.பி. அய்யாக்கு அம்மா. பெரியவங்கள இப்படிக் கும்பிட்டா போதாது. நல்லா பாத்துக்கணும். சீக்கிரம் நல்ல படியா உடம்ப குணப்படுத்தணும்.”

“சரிங்க டாக்டரம்மா!”

“முதல்ல இவங்கள மொள்ள பாத்ரூமுக்குப் போகணுன்னா கூட்டிட்டுப்போ. முகத்தைத் துடைச்சிவிட்டு, சாப்பாடு குடு. பிறகு, இதா, இந்த மாத்திரை வச்சிருக்கிறேன், மூணு மாத்திரை. குடுக்கணும்...”

“சரிங்க டாக்டரம்மா.”

“அப்ப, நா வரேன் பெரிம்மா? மாத்திரை சாப்பிட்டுட்டு நல்லாத் தூங்குங்க...”

கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள்.

கன்னியம்மா, கதவைத் தாழிடுகிறாள்.

அவளை மெள்ள எழுப்பி, அருகிலுள்ள குளியலறைக்குக் கொண்டு செல்கிறாள்.

ஓ... குளியலறையா? பளபளவென்று பளிங்கு. எதிரே கண்ணாடி, கழுவும் தொட்டி. கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்க, கருப்பும் வெளுப்புமாகப் பம்மென்று முடி. முகம் ‘அசிங்கமாக’ப் படுகிறது. எப்போதேனும் அவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாளா? புருசன் இருந்த நாட்களில் கூடக் கண்ணாடி பார்த்து முகம் சீவிப் பொட்டு வைத்துக் கொண்டதில்லை. அடங்காத முடியை ஒரு மரச்சிப்பினால் அழுந்த வாரி கையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/278&oldid=1050358" இலிருந்து மீள்விக்கப்பட்டது