பக்கம்:உத்தரகாண்டம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298   ✲   உத்தரகாண்டம்

பெரியவங்கல்லாம் வாராங்க. முதலமைச்சர் வருவாரு. எல்லாக் கட்சித் தலவருங்களும் வராங்க. டி.வி. காமிராவா வந்திருக்கு. அதெல்லாம் பாக்க வாணாமா?...”

“எனக்கு ஒண்ணும் பாக்க வாணாம் கன்னிம்மா. இந்த எடத்த வுட்டு எப்பிடின்னாலும் வெளில கொண்டு போ. அவங்க வேற அம்மான்னு இங்க வந்து என்னப் பாக்க, போட்டோ புடிக்க வாணாம்....”

“சரி, இந்த காபியக் குடிச்சிக்க, நா வாரேன்...”

காபியைப் பருகுகிறாள்.

“நீ யார் பெற்ற மகளோ? இப்ப நீதான் எனக்கு மகள் மகன், அப்பன் அம்மை, எல்லாம் கண்ணு?...”

“அழுவாத, அழுவாத ஆயா, அநாதைக்கு அநாதை துணை. நா உன்னோட வருவேன். எந்நேரமும் இந்தப் புள்ளீங்க சீண்டல்; உனக்குக் குருமா சோறு கொண்டாந்திச்சே, அந்தக் கசுமாலத்துக்கு பெரிசு என்னக் கட்டி வச்சித் தாலிபோட வச்சிருக்கு. மூணுவாட்டி இந்தச் சந்திரி அம்மாவே மாத்திரை குடுத்துக் கலச்சா, பாவி. பெறகுதா தாலி- நீ வா, அசுவினிமேடம் ரொம்ப நல்லவங்க. பெரியம்மா. ரஞ்சியம்மாவும் நல்லவங்கதா. ஆனா, இவுங்கல்லாம் விசம். எப்டீன்னாலும் போயிடுவம்...”

வெளி உலகெல்லாம் அலை ஓய்ந்து, துடிப்புகள் மங்கிய இருள் நேரத்தில், ஒரு போர்வையைப் போத்தி அவளைக் கன்னியம்மா எப்படியோ ஒழுங்கை, சந்து, என்று கூட்டிச் செல்கிறாள். பின்னே ஒரு சிறு திட்டி வாயில். கதவு திறந்ததும் ஒரு வீதி-அரவம் அடங்கிய தெரு. அசுவினி ஓர் ஆட்டோவுடன் நிற்கிறாள். அவள் கையில் ஒரு பை இருக்கிறது.

‘கன்னிம்மா, பத்திரம்.... நா சொன்னதெல்லாம் நினப்பிருக்கா?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/300&oldid=1050413" இலிருந்து மீள்விக்கப்பட்டது