பக்கம்:உத்தரகாண்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34   ✲   உத்தரகாண்டம்

காப்பவர்கள் என்று குடிசை வீடுகள் இருந்தன. பின்னால் ஒரு குளம் இருந்தது. பக்கத்தில் புற்று இருந்தது... எதுவுமே இப்போது நினைவில்லாதபடி மாறிவிட்டது. கோடியில் இப்போது, மூன்றடுக்கில் இந்தப் பதினைந்து வருஷங்களில் வெங்கடேசா பள்ளிக் கூடம் வந்திருக்கிறது. பழைய கடை வீதியில் சுதந்தரம் வந்த வருசத்தில் அய்யா திறந்து வைத்த பஞ்சாயத்துத் துவக்கப்பள்ளி இப்போது, நகராட்சி பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. எல்லா மூலைகளிலும் இங்கிலீசு பள்ளிக்கூடம் தான். எங்கேயோ பொத்துரு காலேஜ் என்று இன்ஜினிர் படிப்புப்படிக்க சங்கரியின் அண்ணன் பிள்ளையையும் அவளையும் இங்கே குடிவைத்தார். அவள் வாசலில் உட்கார்ந்திருக்கையில் பார்ப்பார். இடப்பக்கம் வயல்களாக விரிந்திருந்த இடங்களை வீடுகளும் ஏதேதோ கட்டிடங்களும் விழுங்கிவிட்டன. இந்த நாலைந்து ஆண்டுகளில் சாலை போட்டுவிட்டார்கள். காலை ஏழரை மணி, எட்டுமணி என்று கல்லூரி பஸ்கள் போகின்றன. பெண் பிள்ளை ஆண் பிள்ளை வித்தியாசம் இல்லாமல் முதுகில் ‘பில்ட்’ போட்ட மாதிரி சுமையை மாட்டிக் கொண்டு பள்ளிக்கு எதிரே நிற்கும். எதிர்ச்சாரியில் வரிசையாகக் கடைகள்- கட்டிடங்கள் இப்போதுதான் முளைக்கின்றன. கடைகள் என்றும், வங்கி வருகிறதென்றும் சொல்கிறார்கள். பள்ளிக் கூடத்தை நடத்தும் பத்மதாசன், தெலுங்கா, தமிழா, கன்னடமா, இந்தியா என்று தெரியாது. பள்ளிக்காகப் பொது இடங்கள் எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு விட்டான். மாந்தோப்பு, குடிசைகள் எல்லாம் இல்லை. குளம் இருந்த இடமும் அவர்கள் வசம். புற்றைச் சுற்றி ஒரு கோயில் எடுத்து, பக்திமான் என்று காட்டிக் கொண்டிருக்கிறான்.

இந்த வீட்டு அய்யா படுக்கையோடு இருந்த நாட்களில், காலமாவதற்கு ஒருமாதம் முன்பு வந்தான். கருவலாக, ஒட்டைக்குச்சிபோல இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/36&oldid=1049422" இலிருந்து மீள்விக்கப்பட்டது