பக்கம்:உத்தரகாண்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    67

காலேஜ், சயன்ஸ் காலேஜ், பாலி டெக்னிக்னு ஏகப்பட்ட காலேஜ் வச்சிட்டாங்க. இதுக்குள்ளயே ஸ்கூல், அதா குருகுல வித்யாலயா, டெக்னிகல் இன் ஸ்டிட்யூட், கம்ப்யூட்டர் மையம், எல்லாம் கட்டியாச்சி. நீங்க இருந்த வூடு, குளம், மரங்கள், கிரவுண்டு, எதும் இல்ல. மாடி மாடியா கட்டிடம். அடையாளமே தெரியல... இவளுக்குப் பேச்சே எழும்பவில்லை.

“அந்தப் பொம்புளன்னா யாரு? செங்கமலமா? அவளுக்கு அம்புட்டுப் படிப்பு ஒண்ணும் கிடையாதே? பாகீரதியம்மா வீட்டுல கூடமாட சமையல் செய்திட்டிருந்திச்சி. அப்படியே அய்யா முதமுதல்ல குருகுலத்துக்குக் கூட்டி வந்தாங்க, படிக்க. பாக்க நல்லாயிருப்பா. பராங்குசத்துக்குக் கட்டி வச்சாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு பொம்புளப் புள்ளயும் ஆம்புளப்புள்ளயும் பொறந்திச்சி. சாதுவான குணம்...”

“அதென்னமோ, இப்ப இந்தப் பொம்புளயத்தா சொல்றாங்க...” என்று குரலை இறக்குகிறாள் ராசம்மா.

“டாக்டர் எமிலின்னு பேரு. கிறிஸ்தவங்க. இவங்கதா எல்லா நிர்வாகமும். வெளிரூம்ல காத்துக் காத்து உள்ள போனம். அங்க சுவரில அய்யா, அம்மா, காந்தி படம் மாட்டிருக்காங்க. ஒரு சின்னப்பலகையிலே ஊது வத்தி, பூ எல்லாம் வச்சிருந்தாங்க. மத்தப்படி வெளி ரூம்ல, சுவருபூர, அந்த வித்யாலயத்துக்கு வந்த பெரிய... மனிசங்க, ஸ்டாருங்க, அரசியல் வாதிகள், மந்திரிகள்... உங்க மகன் கூட மாலை போட்டுக்கிட்டு வருகை தந்தது பட்டமளிப்பு விழா நடத்தியது... எல்லாத்திலும் இந்த அம்மாதான் முதலா இருக்காங்க. அவரும் இருக்காரு. அவுரு சேர்மன்... இவங்கதான் எல்லாம். எத்தனையோ வெளிநாட்டுக்காரங்க... சேவாதிலகம்னு சாமி பட்டம் குடுத்திருக்காரு...”

கேட்கக் கேட்கத் தலை சுற்றுவது போல் இருக்கிறது.

“அப்ப, பராங்குசத்தை நீ பாக்கவே இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/69&oldid=1049510" இலிருந்து மீள்விக்கப்பட்டது