பக்கம்:உத்தரகாண்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    97


“ஸார், கம்ப்ளெயின்ட் புக் பண்ணி, எஃப்.ஐ.ஆர். போட்டுடறோம்” என்று போலீசு அதிகாரியே சொன்னது கேட்டது.

“அப்பா, நீங்கதா இந்த அரசியலும் வோனாம் மண்ணாங்கட்டியும் வாணாம்னு ஒதுங்கியிருக்கிறீங்களே? இப்படி எதுக்கு அங்கிரமம் பண்ணாங்க?” என்று ராதாம்மா ஆற்றாமைப்பட்டாள்.

“நாட்டுக்கு சுதந்தரம்னு உங்ககாலத்தில் கனவு கண்டது நடந்தாச்சு. இங்கேயே கொண்டாடிய குடியரசு தின விழா இல்லாமல் வேறெ இடங்களுக்குப் போக வேணுமா?...”

“பிரிட்டிஷ் ஆட்சியில் கூட உங்களுக்கு இப்படி எதுவும் நேரல. காலில்தான் சாட்டையடி விழுந்தது. சட்டையைக் கிழித்து, கீறி கல்லடி கொடுத்து... இந்தி படிக்காட்டி போகட்டும். இப்படி ஒரு வன்முறையில் ஈடுபடணுமா?... இன்னும் கேஸ், கீஸென்று போனால் என்னென்ன நடக்குமோ தெரியலியே?...” என்று அம்மா புலம்பினார்.

“இல்லீங்கம்மா, இந்தக் கும்பல் கொள்ளி எடுத்திட்டு திரிவது, வெறும் ஸ்கூல் பிள்ளைகளின் எதிர்ப்பு இல்ல. திட்டமிட்டு பிள்ளைகள் மனசில் விஷம் விதைச்சு, இந்த சந்தர்ப்பத்தை நெருக்கடியாக்கியிருக்காங்க. நேத்து தெற்கே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்துப் போட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கு. அய்யா உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கலாம். இத இப்படி சும்மா விடக்கூடாது. கேஸ் புக்பண்ணி...” என்று போலீசுக்காரர் சொன்ன போது, அய்யா அவர் கையைப் பற்றிக் கொண்டார். “கேசும் வானாம், ஒண்னும் வாணாம். இந்த நாட்டு அரசியல் இப்படித் தாறுமாறாக் குழம்பும்னு நான் நினைக்கல. எல்லாரும் துடிப்புடைய பள்ளிப் பிள்ளைகள். குமரப் பருவத்து வேகம். அவர்களுடைய எதிர்காலம் கெடக் கூடாது. கொள்ளி எடுத்தவன், கொளுத்தியவன், கொலை செய்ய வன்முறையில இறங்கியவன்னு நம் கண்களிலேயே நாம் திராவகம் ஊத்திக் கொள்ளுற செய்கை- எதிர்வினை

உ.க.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/99&oldid=1049620" இலிருந்து மீள்விக்கப்பட்டது