பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

தங்கியிருந்தாளாம். என்னே எதிர்பார்த்துத்தான் அவள் அப்படிச் செய்திருக்கிறாள், சில நாட்களில் நான் பிறந்துவிட்டேன்.

பிறந்து இரண்டு நாட்கள் வரை, என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. படுத்தபடியே இருந்தேன். என் மேல் ஈ மொய்க்காதபடி அம்மா துதிக்கையால் வீசிக்கொண்டேயிருந்தாள். என் உடம்பிலே மிருதுவான கொழுந்து மணலைப் போட்டுப் பக்குவமாகத் தேய்த்துவிட்டாள். முதல் பத்து நாட்கள் பாலைக் குடிப்பதும் தூங்குவதுமாகவே பொழுது போக்கினேன். பால் குடிப்பது என்றதும் துதிக்கையால் குடித்திருப்பேன் என்றுதானே நினைக்கிறிர்கள்? இல்லை. வாயால்தான் குடித்தேன்! அம்மா மடியிலிருந்த இரண்டு காம்புகளையும் சப்பி சப்பிக் குடித்தேன்.

பசுவின் மடியைப் போல் என் அம்மாவுக்கு இருக்காது. குரங்குக்கு இருப்பது போல முன் கால்களுக்குச் சிறிது பின்னால் வலது புறம் ஒரு காம்பும், இடது புறம் மற்றொரு காம்பும் இருக்கும்.