பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


சேர்ந்த ராட்டின் பெருமை
செப்புவேன் கேளருமை
தீருமே நம் வறுமை..."

பாவலரின் இந்தப் பாடலைச் சின்னண்ணா மரகதமாக வந்து பாடும்போது சபையோர் நீண்ட நேரம் கைதட்டிக் கொண்டே யிருப்பார்கள். நாடகத்தில் இரண்டொரு பாத்திரங்களைத் தவிர எல்லோரும் கதராடைகளையே புனைந்து வருவார்கள். நாடகம் முழுதும் கதர் பிரசாரமாகத்தான் இருக்கும்.

பாவலரின் அவதானம்

பாவலர் அபாரமான நினைவாற்றலுடையவர். மிகச் சிறந்த முறையில் அவதானம் செய்யக் கூடியவர். ‘சதாவதானம் பாவலர்’ என்றே அவரைக் குறிப்பிடுவார்கள். எட்டுப்பேருடைய கேள்விகளுக்கு விடை சொல்லுபவரை ‘அட்டாவதானி’ என்றும், பத்துப் பேருக்கு விடை சொல்லுபவரைத் ‘தசாவதானி’ என்றும், பதினாறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சோடசாவதானி’ என்றும், நூறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சதாவதானி’ என்றும், குறிப்பது வழக்கம். இக்கலையில் தேர்ச்சி பெற்றோர் இப்போது மிகக் குறைந்துவிட்டார்கள். பாவலர் இந்தக்கலையை நன்கு பயின்றிருந்தமையாம் நாங்கள் எல்லோரும் அவரை அவதானம் செய்து காண்பிக்குமாறு வேண்டினோம். சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள கம்பெனி வீட்டில் ஒருநாள் வேடிக்கையாகத் தசாவதானம் நடைபெற்றது. நான் பாவலரின் முதுகின் பக்கமாக இருந்து உளுந்தம்பருப்பை ஒவ்வொன்முக அவரது முதுகில் எறியும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சின்னண்ணா எதிரிலிருந்த கதவைப் பூட்டித் திறக்கும் பணியை ஏற்றுக்கொண்டார். மற்றும் பல நடிகர்கள் பலவிதமான பொறுப்புக்களை ஏற்றார்கள். சுமார் ஒருமணி நேரம் அவதானம் நடைபெற்றது. நான் எத்தனை உளுந்துகள் முதுகில் எறிந்தேன் என்பதையும், சின்னண்ணா எத்தனை முறை பூட்டுத் துவாரத்தில் சாவியைப் புகுத்தினார் என்பதையும், பாவலர் சரியாகச் சொன்னபோது எங்களுக்கெல்லாம் பெரு வியப்பாக இருந்தது. இதைப் படிப்பவர்களில் சிலருக்கு அவதானம் என்றாலே என்னவென்று புரியாதென நினைக்கிறேன். அதை விரிவாக