பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


பாடல்கள் அதிகம். அந்த நாடகமே பலமுறை வைக்கப் பெற்றது. கோவலன் நாடகத்தில் நான் இடைச்சியாகவும், நன்மந்திரி யாகவும் நடித்தேன். நான் இடைச்சி வேடத்தில் ‘தயிர் வாங்கலேயோ’ என்று பாடி, மேடையில் வரும்போது சபையில் சில ரசிகர்கள் சில்லரை நாணயங்களையும், ரூபாய்களையும் என் மீது வீசி எறிவார்கள்.

அப்போது சங்கீத ஒளி விளக்காகக் கருதப் பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா மற்றொரு கொட்டகையில் வந்து ஸ்பெஷல் நாடகம் போட்டார். அந்தச் சமயம் அவருக்கு மகரக்கட்டு ஏற்பட்டு சாரீரம் தொந்தரை கொடுத்துக் கொண்டிருந்த காலம். அவருடைய நாடகங்களுக்கு வசூல் ஆகவில்லை. “எஸ். என். இராமையா பாட்டுக்கு முன், கிட்டப்பா பாட்டு செல்லாது” என்றெல்லாம் ரசிகர்கள் பேசிக்கொள்வதாகப் பெரியண்ணா அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். அவருக்குக் கிட்டப்பா பாட்டில் அதிக மயக்கம், கிட்டப்பாவின் நாடகங்களைப் பார்த்துவிட்டு வந்து, அண்ணா எங்களிடம் சதா புகழ்ந்து கொண்டேயிருப்பார். இருந்தாலும், என்ன செய்வது? கிட்டப்பா நாடகங்களுக்கு வசூல் இல்லை. எஸ். என். இராமையா நடித்த எங்கள் சங்கீதக் கோவலனுக்குப் பிரமாதமான வசூல். அந்த நாளில் தஞ்சையில் எட்டு முறை கோவலன் நாடகம் வைக்கப் பெற்றதென்றால், அந்த நாடகத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்பது தெரிகிறதல்லவா?

தஞ்சாவூரில் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே நாகைப்பட்டினத்துக்குப் போய் கோவலன் நாடகம் போட்டு வந்தோம். தஞ்சையில் நல்ல வசூலானதால் ஏற்கனவே இருந்த பல கடன்கள் தீர்ந்தன. நடிகர்களுக்கும், மற்றத் தொழிலாளர்களுக்கும் பல மாதங்கள் இருந்து வந்த சம்பளப் பாக்கியும் தீர்ந்தது. அடுத்த ஊர், புதுக்கோட்டை போவதாக முடிவு செய்தார்கள்.