பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


பெண்ணல்ல” என்று கூறினார். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே முதல் வகுப்பில் இது பற்றிச் சலசலப்பு ஏற்பட்டது. பெண்ணென்றே கருதிய செட்டியார், இறுதியாக நேரிலேயே கேட்டுவிட முடிவு செய்தார். மெதுவாகச் சின்னண்ணாவிடம் நெருங்கி, “பெண்கள் இங்கே உட்காரக் கூடாது” என்றார், உடனே சிற்றப்பா சிரித்துக் கொண்டே, “பெண்ணல்ல ஐயா, அவன் பையன்” என்று கூறினார். இருந்தாலும் செட்டியார் மனம் அமைதியுறவில்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும், “நீ பெண்ணா, ஆணா?” என்று சிறிது கோபத்தோடு கேட்டார். சிற்றப்பாவுக்கும் கோபம் வந்து விட்டது. அவர் ஆத்திரத்தோடு, எழுந்து, “என்னய்யா, நான்தான் பையன்என்று சொன்னேனே; ஒரு மணி நேரமாக அவதிப் படுகிறீரே ! பையனா பெண்ணா. என்று பார்க்கிறீரா?” என்று சத்தம் போட்டார். சபையில் குழப்பம் ஏற்பட்டது. அப்புறம் தெரிந்தவர்கள் சிலர் வந்து, சிற்றப்பாவையும் செட்டியாரையும் சமாதானப் படுத்தினார்கள். பிறகு இறுதிவரையில் இருந்து, நாடகத்தை நன்கு ரசித்துப் பார்த்தோம்.

அபராதக் காணிக்கை

மறுநாள் எங்கள் நாடகம் தொடங்கியது. வசூல் அமோகமாக இருந்தது. இதற்கு முன் எந்த ஊரிலும் இந்த அளவுக்கு வசூலானதில்லை. மூன்று நாடகங்கள் நடைபெற்றதும் சின்னையா பிள்ளைக்குக் கொஞ்சம் நப்பாசை ஏற்பட்டது. முதல் வகுப்பு மட்டும் இரண்டரை ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக உயர்த்தப் பெற்றது. அதற்கும் செட்டிப் பிள்ளைகள் சளைக்கவில்லை. மேலும் இரண்டு நாடகங்கள் நடைப்பெற்றன. மீண்டும் முதல் வகுப்புக் கட்டணம் மூன்றரை ரூபாயாக உயர்ந்தது. அப்போதுதான் செட்டிப் பிள்ளைகள் கட்டணம் உயருவதைக் கொஞ்சம் கவனித்தார்கள். இரண்டு நாடகங்களுக்குப் பின், முதல்வகுப்பு நான்கு ரூபாய் என அறிவிக்கப்பெற்றதும் செட்டிப்பிள்ளைகள் விழித்துக் கொண்டார்கள். அன்றும் நல்ல கூட்டம். நாடகம் தொடங்கியதும் முன் வரிசையில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கட்டணம் நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்கள். சின்னையாபிள்ளை வந்து அதற்காக மன்னிப்புக்