பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


ஊரானதால் நாங்கள் அங்கேயே கம்பெனியைக் கலைத்துவிடக் கூடுமெனச் சின்னையாபிள்ளை பயந்தார். எனவே, கொல்லம் கொட்டகையைப் பேசி வந்தார். நாகர்கோவில் நாடகம் முடிந்து கொல்லத்திற்குச் சென்றோம்.

மகரக்கட்டு

கொல்லம், காயிக்கரை முதலாளி சாய்புவின் கொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. கொல்லத்தில் சின்னண்ணாவுக்கு, “மகரக் கட்டு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தோன்றின. பெண்கள் மங்கைப் பருவம் அடையும்போது உடலிலே மாறுதல் ஏற்படுவதுபோல் ஆண்களின் பருவ வளர்ச்சியைக் காட்டுவதற்குரிய அறிகுறிதான் ‘மகரக்கட்டு’ என்பது. பதினைந்து அல்லது பதினாறாவது வயதில் இந்த மகரக்கட்டு தோன்றும். இனிமையான குரல் மாறி கனமான குரல் ஏற்படும். இந்த இடைக்காலம் அந்த நாளில் நடிகர்களுக்கு மிகவும் பயங்கரமான காலமென்று சொல்லலாம். குரல் நாம் நினைக்கிறபடி கட்டுப்படாமல் அதன் போக்கில் நம்மை இழுத்துப் போகும். பிசிர் அடிக்கும் பருவம் என்று நாங்கள் இதைக் குறிப்பிடுவோம். பாட்டுக்கு முதன்மை யிருந்த காலமாதலால் பெரும்பாலான நடிகர்கள் இந்தக்கட்டத்தைத் தாண்டுவது கஷ்டம். இந்த மகரக்கட்டு வரும் சமயத்தில் பெரும்பாலும் நடிகர்கள் மதிப்பிழந்து விடுவார்கள். குரலிலே கோளாறு ஏற்படுகிறது என்று தெரிந்ததும் அவருடைய வேடங்களெல்லாம் உடனடியாக மாற்றப்படும். அதிலும் பெண்வேடம் புனையும் இளைஞர்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல முடியாத மனோவேதனை.

சின்னண்ணாவுக்கு மகரக்கட்டு ஏற்படுவதைக் கண்ட சின்னையாபிள்ளை ஏதேதோ சொன்னதாக அறிந்தோம். “இனி மேல் முத்துசாமி, வேடத்திற்குப் பயன்பட மாட்டான். ஷண்முகத்திற்கு மட்டும் ஐநூறு ரூபாய் சம்பளம் தர இயலாது” என்று சின்னையாப் பிள்ளை சொன்னதாகப் பெரியண்ணா வந்து கூறினார். குறைந்த சம்பளம் போட்டுப் புதிதாக ஒப்பந்தம் எழுத வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாக அறிந்தோம். பெரியண்ணாவுக்கும் சின்னையாப் பிள்ளைக்கும் பேச்சு வார்த்தை தடித்தது. அம்மாவுக்கு இந்தச் செய்தி எட்டியதும், எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்பெனியிலிருந்து விலகக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த அவர்கள், உடனேயே கம்பெனியிலிருந்து விலகிவிட வேண்டுமென அறிவித்தார்கள். இரண்டு நாட்களில் கம்பெனியை விட்டுப் பிரிந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம்.