பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190


நகைச்சுவை நடிகர்களுக்குக் கேட்க வேண்டுமா, என்ன! அவர் பாடும்போது தலையை அசைக்கும் பாங்கையும், உதடுகள் குவிந்து விரியும் தோற்றத்தையும் அப்படியே காப்பியடித்தார்கள் சிலர். இவர்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும், புளிமூட்டை ராமசாமியும் முதன்மையாக இருந்தனார். ராமதாசில் ஸ்ரீராம நவமி உத்ஸவத்தில் சாப்பிட்டு விட்டு வந்து, அதைப்பற்றி வர்ணித்துப் பாடும் இரு பிராமணர்களாக நடிக்க வேண்டிய நிலை இவ்விருவருக்கும் நேர்ந்தது. பிறருக்குச் சொல்லிக் கொடுப் பதையே நையாண்டி செய்யும் இவர்கள், தாங்களே பயிலும் நிலை ஏற்பட்டபோது, நிரம்பவும் திண்டாடினார்கள். ஒரு நாள் என். எஸ். கிருஷ்ணனையும், ராமசாமியையும் எதிரே உட்கார வைத்துக் கொண்டு பாகவதர் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார்.

கூட்டுக்கறிகள் பாருமே
    கோசம்பரி சட்னி பச்சடி லாம்பார் (கூட்டு)
அப்பளமிது செப்பரிதாகும்
    சொப்பனத்திலும் கண்டிலோம்
ஷோக்கு ஷோக்கென் றுண்டிடுவோம் (கூட்டு)

இதைத் தம்புடு பாகவதர் அவருடைய வழக்கமான ‘பந்தாவில்’ பாடத் தொடங்கிய உடனேயே என். எஸ். கிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவர் நேராகப் பாகவதர் முகத்தைப் பார்க்காமல் சிரிப்பை அடக்கிக்கொண்டு, ராமசாமியைப் பார்த் தார். அவரும் அதே நிலையில் இருந்தார். வாயைத் திறக்காமல் உதட்டைக் கடித்த வண்ணம் இருந்தால் ஒரளவு சிரிக்காமல் சமாளிக்க முடியும்; ஆனால் வாயைத் திறந்து பாடவேண்டுமே! இரண்டு மூன்றுமுறை பாகவதர் பாடிவிட்டு, ‘நீங்கள் பாடுங்கள், பாடுங்கள்’ என்றார். இருவரும் பாடுவதற்கு வாயைத் திறந்து, “கூட்டு கறிகள் பாருமே” என்றார்கள். ‘பா’ என்ற சொல்லிலேயே பற்கள் முப்பத்திரண்டும் தெரியும்படியாக ‘குபுக்’ என்று இருவரும் சிரித்துவிட்டார்கள். இது பாகவதருக்கு எப்படி இருந்திருக்கும். இளம்பிள்ளைகளின் விளையாட்டு என்ற முறையில் பெருந் தன்மையோடு “சரி நாளைப் பாடலாம்” என்று எழுந்து போய் விட்டார். செய்தி பெரியண்ணா காதுவரைக்கும் எட்டியது.