பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் பிரவேசம்

1931-ஆம் ஆண்டில் தான் நாங்கள் அரசியல் விஷயங்களில் நேரடியாகத் தொடர்புகொள்ள ஆரம்பித்தோம். அன்னையார் இறந்த சில நாட்களில் பண்டித மோதிலால்நேரு இறந்ததாகச் செய்திப் படித்தோம். கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதன் முதலாகப் பாரதி பாட்டுக்கள் பாடினேன். தஞ்சைக்கு வந்தபின், பகவத்சிங் டில்லி சட்டசபை யில் குண்டு போட்ட செய்திகளையும், அதுபற்றிய வழக்குகளையும் நாங்கள் தொடர்ந்து படித்து வந்தோம்.

திடீரென்று ஒருநாள் பகவத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தியைப் பத்திரிக்கைகளிலே படித்தபோது எங்களுக்கெல்லாம் உள்ளம் குமுறியது. அரசியல் விஷயங்களில் மனத்தை ஈடு படுத்திக் கொண்டிருந்த எங்களுக்கு, இச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அன்று மாலே தஞ்சை பெரியகோயிலுக்கு அருகேயுள்ள மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தேச பக்தர் வேங்கடகிருஷ்ணபிள்ளை தலைமை வகிப்பாரென அறிவிக்கப் பெற்றிருந்தது. அப்போது எங்கள் கம்பெனியில் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் என். எஸ், கிருஷ்ணனும் தீவிரவாதிகள். இருவரும் இணைபிரியாத தோழர்கள். நாடகமேடை சம்பந்தமான பொறுப்புகளானலும் சரி, வேறு எதுவானாலும்சரி, இருவரும் கலந்தே முடிவு செய்வது வழக்கம். அப்போதெல்லாம் நான் சுயேச்சையாக வெளியே செல்லும் வழக்கமில்லை. அன்று நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் போல் என்னுள்ளம் துடித்தது. அன்று கூட்டம் நடைபெறாதென்றும், தடை செய்யப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் வந்தன. சின்னண்ணாவும் கலைவாணரும் கூட்டத்திற்குப் போயிருந்தார்கள்.