பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286


கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. கோவையில் அப்போது ஏ. என் மருதாசலம் செட்டியார், மனோரமா பிலிம்ஸ் என்னும் படக் கம்பெனியைத் தொடங்கியிருந்தார். அவர் சதிலீலாவதியை படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதற்காகச் செட்டியார் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் கம்பெனியில் அப்போது நகைச்சுவை நடிகராக இருந்த சுந்தரமையர் எங்கள் அனுமதி இல்லாமலை செட்டியாரது படத்தில், நடிக்க முன்பணம் வாங்கியதாக அறிந்தோம். மற்றும் சில நடிகர்களும் இவ்வாறே நடந்து கொண்டார்கள். செட்டியார் எங்களையும் படத்தில் நடிக்க அழைத்தார். பெரியண்ணா இதற்கு ஒப்பவில்லை. இந்த நிலையில் காண்ட்ராக்டு முடிந்தது. உதக மண்டலத்திற்குப் போய் சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உதகமண்டலத்தின் குளிரை நான் ஒருமுறை ஏற்கனவே அனுபவித்திருந்தேன். எனவே, குளிருக்கு வேண்டிய ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த முடிவு செய்தது எனக்குத் திருப்தியளிக்கவில்லை.