பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

359


யிலேயே நாகர்கோவில் போய்ச் சேரும் எண்ணத்துடன் தம்பி பகவதியையும் அழைத்துக் கொண்டு காரில் பயணமானோம். சின்னண்ணா தம் மனைவியுடன் முன்பே நாகர்கோவில் சென்றிருந்தார்.

தங்கையின் கோலம்

நாம் நினைத்தப்படி எதுவும் நடப்பதில்லையே! பயணத்தில் பல்வேறு இடையூறுகள்; தடங்கல்கள். விருதுநகரைத் தாண்டியதும் டயர் பஞ்சர். ஸ்டெப்னியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். சாத்துரைக் கடந்ததும் ‘டியூப் பஞ்சர்.’ மீண்டும் எப்படியோ சமாளித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். கயத்தாற்றின் அருகே வரும்போது மற்றொரு டியூப்பும் பஸ்டு ஆகி விட்டது. மேலே பயணத்தைத் தொடர வழியில்லை. நான் பஸ்ஸில் திருநெல்வேலிக்குச் சென்றேன். இரவு நேரம். மிகுந்த சிரமபட்டு அலைந்து, புது டியூப் வாங்கினேன். வாடகைக் காரில் வந்து சேர்ந்தேன். டியூப்பைப்போட்டுக் கொண்டு புறப்பட இரவு மணி 10க்கு மேலாகிவிட்டது. எங்கும் நிற்காமல் இரவு 2 மணி யளவில் நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். கீழத் தெருவிலுள்ள எங்கள் இல்லத்தை அடைந்தோம். எங்கோ ஒரு நாய் ஊளை யிட்டது. கதவைத் தட்டினோம். அண்ணியர் கதவைத் திறந்தார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தோம். அண்ணியார் வாயிலிருந்து வந்த சொற்கள் எங்களை அதிர்ச்சியடையச் செய்தன. தங்கையின் கணவர் சுப்பையாபிள்ளை 15.3.40 அதி காலை 5 மணிக்கே காலமாகிவிட்டார். எங்கள் வருகைக்காகக் காத்திருந்து இரவு 7 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நாங்கள் வந்துவிட்டதை அறிந்த தங்கை சுப்புவின் அழுகுரல் என் செவிகளில் கேட்டது. 20 வயதே நிரம்பிய இளமைப் பருவம் இரு பெண் குழந்தைகள் ஏதுமறியாத நிலையில் அந்தப் பச்சிளங் குழந்தைகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. வெள்ளைச் சேலையைப் போர்த்திக் கொண்டு கைம்மைக் கோலத்தில் கிடந்த என் அருமைத் தங்கையின் திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் என்னல் முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?