பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

405


கொடுங்கள் என்றார், “என்னவேடம் வேண்டும்? சிவ லீலாவில் எந்த வேடத்தை நீ விரும்புகிறாய்?’ என்று கேட்டேன்.

‘நீங்கள் போடக்கூடிய சண்பக பாண்டியனை நான் நடிக்க விரும்புகிறேன் என்றார். அவரது துணிவைக் கண்டு நான் மகிழ்ந்தேன். உடனே அரசி பூங்குழலியாக நடிக்கும் திரெளபதியை அழைத்துவரச் சொல்லி ஒத்திகை பார்த்தேன். பாடத்தை உளறாமல்; சிறிதும் பயப்படாமல் நன்றாக நடித்தார். தெளிவாகப் பேசினார். “சரி இன்றே நடிக்கலாம்” என்றேன். ஒரே மகிழ்ச்சி அவருக்கு. அன்று முதல் இராஜேந்திரனே சண்பக பாண்டியனாக நடித்து வந்தார். விரைவில் முன்னேறுவதற்குரிய எல்லா அம்சங்களும் அவரிடம் இருந்தன.

போட்டா போட்டிப் பரிசுகள்

கம்பெனியின் வளர்ச்சி; போர்ச் சூழலால் ஏற்பட்ட பணப் பெருக்கம்; பொது மக்களிடையே பரவிய தமிழுணர்ச்சி: கலையார்வம் எல்லாம் சேர்ந்து கம்பெனிக்கு நல்ல புகழையும் வருவாயையும் கொடுத்தன. இசை மேதை பிடில் வித்வான் இராஜ மாணிக்கம் பிள்ளை அவர்கள் நாடகம் தவறாமல் வந்து பார்த்து எங்களுக்கு ஆசி கூறினார்கள். அவரோடு நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். அவர் வீட்டிற்கு எதிரிலேயே நான் குடியிருந்தேன். கே. ஆர். இராமசாமியும் நானும் பிள்ளை அவர்களிடம் சில இசைப் பாடல்களும் பயின்றோம். திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை, திருவிடை மருதூர் விருசாமிப்பிள்ளை முதலிய நாதசுர மேதைகள் பலரும் வந்து, எங்கள் சிவலீலா, ஒளவையார் நாடகங்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள்; பாராட்டினார்கள். கலைமாமணி காமடியன் சாரங்கபாணியும் அவரது சகோதரர்களும் எங்கள் நாடகம் வெற்றி பெறுவதற்குத் துணை புரிந்தார்கள். கும்பகோணம் ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு, அதற்கு முன் எங்கும் கண்டிராத முறையில் மாபெரும் பரிசுகளை வழங்கி எங்களைப் பாராட்டினார்கள். திருவாளர்கள் ஆரோக்கியசாமி பிள்ளை, சின்னத் தம்பி நாடார், தங்கவேலு உடையார், பொன்னுச்சாமி சேர்வை, சுப்பிரமணிய மூப்பனார், தாயி பால சுந்தரம் செட்டியார், வி. எஸ். அண்டு சன்ஸ், சிக்கா, சம்பத் தாசரதி முதலிய பல அன்பர்கள் வெள்ளியில் பெரிய கதாயுதம், சூலாயுதம், வாள், வேல், வில், அம்புருத்துரணி, உலகம் போன்ற