பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454


ஆகிவிட்டன. நாடகத்திற்கெனத் தனித் தியேட்டர்கள் இல்லை. திருச்சி நகரசபைஒன்றில் மட்டும் தனித் தியேட்டர் அமைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல ஒவ்வொரு நகரசபையும் செய்ய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், சர்க்காரும் செல்வவான்களும் நாடகக்கலை அபிவிருத்திக்கு உதவியளிக்க வேண்டும். இவைகளுக் கெல்லாம் பொதுமக்கள் முயலவேண்டும்.

“பொதுவாக நாடகக்காரர் என்றால் முன்பெல்லாம் மதிப்பு கிடையாது. நையாண்டி செய்வார்கள், பொது மக்களுக்கும் நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. இப்போது நடிகர்களிடம் நன்மதிப்பும் நல்ல தொடர்பும் ஏற்பட்டிருக்கிறது. இத் தொடர்பு நீடிக்கவேண்டும். இதனால் தக்க பயனும் ஏற்பட வேண்டும். என் நண்பர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் அழகுறக் கூறினார். நாடகக்கலை அபிவிருத்தியடைய வேண்டு மென்றால் நாடகக் கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் நடிகனுக்கு நல்ல சம்பளம் வாழ்க்கை வசதி முதலியன கிடைக்க வேண்டும். இலாபப் பங்கீடும் தரப்படவேண்டும். பங்குதாரர்கள் கொண்ட ஒரு லிமிடெட் கம்பெனி அமைக்கப்படவேண்டும். அதிலே சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் வருவாயை நாடகத் தொழிலாளருக்கு இலாபப் பங்கீடாகத் (Bonus) தரப்படவேண்டும். அப்போதுதான் திருப்தியான மனமுடைய நடிகர்கள் இருப்பார்கள். நடிப்பு நேர்த்தியாக இருக்கும். நாடகக் கலையும் வளரும். வேதனை நிரம்பிய வாழ்க்கையிலேயுள்ள வித்துவான் பாடுகிற காம்போதி கூட முகாரியாகத் தானே இருக்கும்! பத்து வருடங்களுக்கு முன் பிரபல நடிகர்களாக இருந்துவிட்டு இன்று பிழைக்கும் வழியற்றுள்ள மாஜி நடிகர்களைப் பார்க்கிறேன். மீசையைத் தடவியபடி நானுந்தான் ராஜபார்ட்டாக இருந்தேன் என்று கூறிக்கொள்வதைவிட அவர்களுக்கு வேறோர் சுவை இல்லை. இப்படி நடிகர்களின் வாழ்வு நொடித்துப் போகிறதென்றால் எப்படிப் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் நாடகத் தொழிலிலே ஈடுபட முடியும்? ஆகவே நாடகக் கலை அபிவிருத்தியிலே அக்கரை கொண்டவர்கள் முதலிலே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நடிகர்களின் - நாடகத் தொழிலாளர்களின் நலத்தைத்தான் - அது நடைபெற்றால்தான் நாடகக்கலை முன்னேறும்.