பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474


ரான போது யாமினியின் தோழி மஞ்சுளா வேடத்தைச் சீதாவுக்குக் கொடுத்தோம். அதனையும் அழகாகச் செய்தாள். எதிர் காலத்தில் சிறந்த நடிகையாக வருவதற்குரிய அறிகுறிகள் அவளிடமிருந்தன. இவ்விரு சகோதரியரும் முத்துக் குமாரசாமிப் பிள்ளையிடம் நடனப்பயிற்சி பெற்றனார்.

கடையம் சகோதரிகள்

இவர்களைப் போலவே மற்றும் இரு சகோதரியர் காரைக்குடியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கும் இதே வயதுதான் இருக்கும். இருவருக்கும் நல்ல குரல். மூத்தவள் பெயர் ராஜம். இளையவள் சந்திரா. இவ்விருவரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் துணைவியார் திருமதி செல்லம்மாள் பாரதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த கடையம் என்ற சிற்றுார். எனவே ராஜம் சந்திரா சகோதரியரைக் கடையம் சகோதரிகள் என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். இவ்விளம் சிறுமியரும் நட்டுவனார் முத்துக்குமாரசாமிப் பிள்ளையிடம் மிகுந்த ஆர்வத்தோடு நடனப் பயிற்சி பெற்றார்கள்.

வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார்

காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம்அவர்கள். தேசபக்தர் சா. கணேசன் அவர்கள், பட அதிபர் ஏ. வி.மெய்யப்பன் அவர்கள் ஆகிய எல்லோரும் ஒளவையார் நாடகம் பார்க்க ஆர்வத்தோடு வந்தார்கள். ஒளவையார் தொடர்ந்து ஒருமாதத்திற்கு மேல் நடைபெற்றது. 26-8-44இல் நடந்த ஒளவையார் நாடகத்திற்குக் கோட்டையூர் கொடை வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் அவர்கள் தலைமை தாங்கி அருமையாகப் பேசினார். பெரிய வெள்ளிக் கோப்பையொன்று பரிசளித்தார். தமிழ் வளர்ச்சிக்குரிய புதிய நாடகம் ஏதாவது தயாரிக்கும் போது, அதற்குரிய காட்சித் தயாரிப்புச் செலவு முழுவதையும் தாமே ஏற்றுக் கொள்வதாகத் தமது செயலாளரிடம் சொல்லி யனுப்பினார். எங்களுக் கெல்லாம் நிரம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒளவையாருக்கு ஆச்சியர் வருகை நாளாக ஆக அதிகமாகிக் கொண்டே வந்தது. தாய்மார்களுக்காக ஆண்கள் பகுதியிலிருந்தும் கொஞ்சம் இடம் ஒதுக்கினோம்.