பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

513


ரியர் வல்லிக்கண்ணன், ‘கலாமோகினி’ ஆசிரியர் இராஜ கோபால் முதலிய திருச்சி எழுத்தாளர்களோடெல்லாம் எங்களுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. திருச்சியில் ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்த பிறகு தியேட்டருக்கு முன்புறமுள்ள முற்ற வெளியில் ஒர் இலக்கியக் கூட்டமே நடைபெறும். எங்கள் நாடகங்களைப் பற்றிய பல்வேறு வகையான விமர்சனங்களை நாங்கள் ரசனையோடு கேட்டுக் கொண்டிருப்போம். அந்த இன்ப நாட்களையெல்லாம் இப்போது நினைத்தாலும் இதயம்பூரிக்கிறது. திருச்சியில் ஒன்றரை ஆண்டு காலமாக நாடகம் முடிந்த பிறகு இவ்வாறு இலக்கியச் சிந்தனைகளில் ஒவ்வொரு நாளும் திளைத்திருந்தோம்.

வாழ்வு சிறிது வளர்கலை பெரிது

“உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்ற வாக்கியத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முன்திரையில் எழுதித் தொங்கவிட்டிருப்பது பற்றிச் சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஒரு நாள் மாலை நாடகம் முடிந்த பிறகு வழக்கம்போல் கூடும் இலக்கிய நண்பர்கள் கூட்டத்தில் இதைப்பற்றி விவாதித்தோம், கலை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வாக்கியத்தை அமைப்பது நல்லதென சிவாஜி ஆசிரியர் திருலோக சீதாராம் யோசனை கூறினார். எங்களுக்கும் அவருடைய யோசனை சரி யாகப்பட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களைத் திருச்சியில் சந்தித்தபோது அவருடனும் கலந்து பேசினோம். கலைத்தொடர்புடைய ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம். “Life is short, art is great” என்னும் ஆங்கில வாக்கியத்தை அவரே எடுத்துச் சொன்னார். அந்த வாக்கியத்தைத் தமிழில் அழகாக மொழி பெயர்த்தார் திருலோக சீதாராம். மறுநாளே வாக்கியம் முன்திரையில் எழுதப் பட்டது. வாழ்வு சிறிது; வளர்கலைப் பெரிதே!

ஆம், இந்த வாக்கியம் கலை சம்பந்தமான எங்கள் குறிக்கோளின் விளக்கமாகவும் அமைந்தது. திருச்சியில் 31. 3. 46 இல் பட்டாபிஷேக நாடகமாக மனோகராவை நடத்தி விட்டுக் கோவைக்குப் பயணமானோம்.