பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518


சேரன் செங்குட்டுவன்

ஒருநாள் சென்ட்ரல் ஸ்டுடியோவில் நானும் ஜூபிடர் சோமசுந்தரம் அவர்களும் கலந்து உரையாடினோம். அப்போது புதிய கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சேரன் செங்குட்டுவனைத் திரைக்குக் கொண்டு வந்தால் மகத்தான வெற்றி கிடைக்குமென்று நான் கூறினேன். சோமு அதனை வரவேற்றார். கதையை உருவாக்குவதற்குத் தகுதிவாய்த்த ஓர் எழுத்தாளரைக் குறிப்பிடுமாறு என்னைக் கேட்டார். நான் உடனே சிறிதும் தயக்கமின்றி அறிஞர் அண்ணாவின் பெயரைக் கூறினேன். “அவர் எழுதித் தருவாரா”? என்றுகேட்டார் சோமு. “அவருக்கு எழுதிச் சம்மதிக்க வைக்கிறேன். அவர் ஒப்புக் கொண்டால் நாமிருவரும் சென்னைக்கு சென்று அவரை நேரில் சந்திக்கலாம்” என்றேன். அன்றே அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். இரண்டு நாட்களில் பதில் கிடைத்தது. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், சேரன் செங்குட்டுவனைத் திரை உலகு நினைவில் கொண்டு வந்தது பற்றி. தங்கள் யோசனைப்படி, நான் கதை வசனம் தீட்டத் தடையில்லை. முன்கூட்டி, கதைப்போக்கு எவ்வண்ணம் இருக்க வேண்டும் - என்னென்ன சம்பவங்கள் மட்டும் மக்களிடம் காட்ட விருப்பம் என்பது பற்றி, ஜுபிடரைக் கலந்து பேசுவது அவசியம் என்று கருதுகிறேன்.ஆவன செய்யும் படி அவர்கட்குக் கூறவும்.
அன்பன்
அண்ணாதுரை

இக்கடிதத்தை ஜூபிடர் சோமுவிடம் காண்பித்தேன். அவர் கூறியபடி காஞ்சியில் விரைவில் நேரில் சந்திப்பதாக அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். 10-11-46இல் இருவரும் சென்னைக்குக் காரிலேயே புறப்பட்டோம். 11 இல் சென்னை வந்து உட்லண்ட்ஸ் ஒட்டலில் தங்கினோம். 11ஆம் தேதி என். எஸ் கே. நாடகசபையின் பைத்தியக்காரன் நாடகம் பார்த்தேன். சகோதரர் எஸ். வி. சகஸ்ரநாமம் உருவாக்கிய நாடகம் இது என்பதை