பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

543


நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரீகத்திற்குக் கண்ணாடி: “பாமரமக்களின் பல்கலைக்கழகம்” என்பனவற்றை யெல்லாம் எழுத்தாளர்களாகிய நீங்கள் நன்கறிந்தவர்கள்.

நமது கவிமணி அவர்கள் ஈரோட்டில் முதலாவதாக நடந்த நாடகக்கலை மாநாட்டிற்கு ஒரு ஆசிச் செய்தி அனுப்பி யிருந்தார்கள். அதில்...... “ஆதிகாலத்தில் தமிழில் நாடகம் இருந்ததோ இல்லையோ என்ற ஆராய்ச்சி அவசியமேயில்லை. இப்பொழுது தரித்திரளுயிருக்கிற ஒருவன், அவனுடைய முப்பாட்டன் கப்பலோட்டி வியாபாரியாய் இருந்தான் என்ற கதையைக் கூறிக் கொண்டிருப்பதானால் யாதும் பயனுண்டா? தரித்திரன் முயற்சி செய்து குபேரன் ஆவதில் ஆட்சேபமில்லையே” என்று குறிப்பிட்டிருந்தார்கள். பொன்னான வார்த்தைகள்!

இன்றைய நிலையில் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? பத்திரிகைகள் என்ன செய்ய வேண்டும்? என்பனவற்றை ஆராய்வதில் செலவழிக்கும் பொழுதுதான் பயனுடையதாயிருக்கும்.

அன்பர்களே, இலக்கியத்துறையின் பல பிரிவுகளில் நாடகமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். கட்டுரை, சிறுகதை, நாவல் முதலிய இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் வளர்ச்சி பெற்று வருவது போல நாடக இலக்கியமும் வளர வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தாக இருக்க முடியும். தமிழ் நாட்டில் நாடக நூல்கள் இப்பொழுதுதான் அரும்புகின்றன! இலக்கியச் சுவையுடைய எழுத்தாளர்கள் இப்பொழுது தான் இந்த உலகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால், நாடக இலக்கியம் நூல் வடிவில் மட்டும் வளரும் இலக்கியமல்ல. படித்துமட்டும் ரசிக்கும் இலக்கியமல்ல. பார்த்து ரசிக்கும் இலக்கியம். அழகாக அச்சிட்டு வெளியிட்டால் போதாது. அரங்கத்தில் ஆடியாக வேண்டும். நாடக இலக்கியம் நூல்வடிவில் மாத்திரம் இருக்குமானல் அது வளர்ச்சிபெற்றதாக நாம் பெருமை பாராட்டிக் கொள்ள இயலாது.

இலக்கியப் பிரிவுகளில் நாடகம் தலைசிறந்ததாகவும் அதிகப் பயனுடையதாகவும் கருதப்படுவதன் காரணமே இதுதான்.