பக்கம்:ஐந்திணை வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஐந்திணை வளம் அவன் அடியெடுத்து நடந்துவருகின்ற அசைவினாலே தானும் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றது. கானத்திலே புதுப்பெயலால் மரங்கள் புதுப்பூக்களை முகிழ்த்துப் பொலிவோடு விளங்குகின்றன. குருந்தின் புதுப்பூக்களைக் கொய்து தொடுத்து அவன் அணிந்து வருகின்றான். சில பூக்களாலே அமைந்த சிறு மாலையும் அன்று; மிகவும் பெரிய மாலை அது. - மாலையின்கண் விளங்கும் பூக்களிலே தேன் நிரம்பி வழிந்து கொண்டும் இருக்கின்றது. தேனுண்ண விரும்பிய வண்டினங்கள் ஆரவாரத்துடன் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. அவன் மனம் தன் வருகையை நோக்கிக் காத்திருக்கும் ஆயமகள்பாற் செல்லுகின்றது. அவளுடன் அவன் துய்க்கப் போகும் இன்பநினைவுகளிலே ஈடுபடுகின்றது. அவன் நடையிலும் புதியதொரு மிடுக்குத் தென்படுகின்றது. இவ்வாறு, மாலை நேரத்தின் வருகையினாலே, இன்ப மயக்கத்தோடு வந்து கொண்டிருக்கின்ற ஆயனின் வருகைத்தோற்றம் தலைவிக்கு ஆறுதலைத் தருவதற்கு உதவாமற் போனதில் வியத்தற்கு எதுவுமில்லை. அவ்வாறு மாலை தோறும் தன் நாயகன் தன்னை நாடி வருவனாயின் எவ்வளவு இனிதாயிருக்கும் என்றுதான் நினைத்து ஏங்குகின்றாள். அவளுடைய ஏக்கம் துக்கமாக வளருவதற்கு, ஆயனைத் தொடர்ந்து வருகின்ற மழை உதவுகின்றது. மழைக் காலத்தைக் குறித்து, இதன்கண் தவறாது வருவேன்’ என்ற தலைவன், வராது பொய்த்த செயலை நினைந்துவாட்டம்பெரிதாகிவருத்த அவள் சுடுமூச்சினளாகிச் சோர்கின்றாள். தலைவியது கற்பின் மேம்பாட்டுநிலையினைக்கவினுறக் காட்டும் சிறந்தசெய்யுட்களுள் இதுவும் ஒன்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/58&oldid=761860" இலிருந்து மீள்விக்கப்பட்டது