பக்கம்:கண் திறக்குமா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

71

சந்தோசத்தைக் காணோம். வருத்தத்தோட, 'வந்தது'ன்னு மட்டும் சொல்லிக்கிட்டே அப்பாலே போயிடறாங்க!"

அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தை என்னை என்னவோ செய்தது. ஒருவேளை சித்ராவை அங்கே யாராவது கஷ்டப்படுத்துகிறார்களோ, என்னவோ என்று எண்ணி என் மனம் கலங்கியது. ஆனாலும் உடனே அவளைப் போய்ப் பார்க்கக் கூடிய நிலையில் நான் அப்போது இல்லை. இந்த நிலையில், 'மேலே அவளை என்ன கேட்பது, என்ன செய்வது?' என்று தெரியாமல் நான் விழித்துக் கொண்டிருந்தபோது, சாலையோரங்களிலிருந்த மின்சார விளக்குகளெல்லாம் 'திக்'கென்று எரிய ஆரம்பித்துவிட்டன. அதைக் கண்ட விசாலம், "இம்மா நேரமாயிடுச்சுங்களே, இனிமே நீங்க சின்னம்மாவைப் பார்க்கப் போக முடியுங்களா?" என்று கேட்டாள்.

"நாளைக்குத்தான் போகவேண்டும்!"

"அப்போ ராத்திரிக்கு எங்கே தங்குவீங்க? - எங்க வீட்டுக்கு வேணும்னா வர்றீங்களா?"

'பண்'பைக் கொல்லும் 'பண'மற்ற அவள் என்னைக் குறிப்பறிந்து அழைத்தது, இழந்த நம்பிக்கையை எனக்கு மீண்டும் ஊட்டுவதாயிருந்தது - "அது என்ன இழந்த நம்பிக்கை" என்கிறீர்களா! - "பண்பில் மிக்க தமிழ்நாடு இன்னும் பணத்தால் செத்துப் போகவில்லை!" என்னும் நம்பிக்கைதான் அது!

இருந்தாலும் அவள் 'வறுமை'யில் பங்கு கொள்ள வேண்டிய நான், ‘வாழ்'வில் பங்கு கொள்ள விரும்பவில்லை . "என்னால் உனக்கு ஏன் சிரமம்? - 'வக்கீல் ஐயா'வைப் பார்த்துவிட்டு வேண்டுமானால் வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/74&oldid=1379433" இலிருந்து மீள்விக்கப்பட்டது