பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் 'மிகவும் துன்பப்பட்டு, மனம் ஆயாசமடைய, மூச்சாகிய வாயுவை நிறுத்தி வெளியே ஓடாமல் உள்ளே அடக்குவதனால் வயிறு உப்பி, கண் பிதுங்குகிறது; உடம்பு நடுங்கிறது. இத்தகைய ஹடயோகத்தினால் இறைவனை அடைவது முடியாது. அப்படி இன்றி ஆறுமுகநாதனுடைய உபதேசப்படி, அவனுடைய திருத் தாளில் பக்தி செய்து அவனே எங்கும் எல்லாப் பொருளுமாக இருக்கிறான் என்ற அறிவு பெற்று, பின்பு உணர்ச்சி பெற்று, அதன் பின்பு அனுபவம் பெறுகின்ற சிவயோகமாகிய நிலை மிக எளிது. இந்தக் கருத்தை முருகப் பெருமான் எனக்கு உபதேசம் செய்தான். இதை நீங்களும் மனத்தில் இருத்தி வைத்து அந்த வழியில் செல்வீர்களானால் முத்தி கைகண்ட பொருளாகும்' என்று அருணகிரியார் நமக்கு உபதேசம் செய்கிறார். துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்து அருத்தி உடம்பை ஒறுக்கில்என் னாம்?சிவ யோகம்என்னும் குருத்தை அறிந்து முகம்ஆ றுடைக்குரு நாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்தும்கண் டீர்முத்தி கைகண்டதே. (உலகத்து மக்களே! வாயுவைத் துருத்தியில் ஊதுவதைப் போல (உள்ளிழுத்து) வெளியே விட்டு அதை நாடிகளில் சுற்றும்படி மாற்றி, நம் ஆசைக்குரிய உடம்பைத் துன்புறுத்துவதனால் என்ன பயன் உண்டாகும்? சிவயோகம் என்னும் மூலத்தைத் தெரிந்து கொண்டு ஆறுமுகங்களை யுடைய குருநாதன் உபதேசம் செய்த உண்மைக் கருத்தை மனத்தில் வைத்து வழிபடுங்கள்; அப்போது முத்தி கைகண்ட அநுபவமாகும். கும்பித்தல் - மூச்சை வெளியே விடுதல், அருத்தி - விருப்பம். குருத்து - மூலம், கருத்து என்றது இறைவன்பால் பக்தி செய்து எல்லாமாக அவன் இருக்கிறான் என்பதைப் பாவித்து உணரும் உண்மையை. இருத்தும் இருக்கச் செய்யுங்கள். கைகண்டது - அநுபவத்திலே பெறத் தகுவது; எளிது என்றபடி.) 173