பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 போக்கும் வரவும் இரவும் பகலும் இல்லாது ஒன்று வந்துவந்து தாக்கும். என்றார். புறம்பும் உள்ளும் இல்லாதது பின்னும் அதற்கு என்ன என்ன இல்லை என்பதைச் சொல் கிறார். மனத்திற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டதாகிய ஒன்றைச் சுட்டிக் காட்ட இயலாது. சுட்டிக் காட்டும் பொருளைக் கண்ட அநுபவம் உள்ளவருக்கு அது போல் இருக்கிறது இது என்றால் விளங்கும். இல்லாவிட்டால் இதுவோ அதுவோ என்ற ஐயம் தோன்றும். அப்படித் தோன்றும்போது இது அன்று. இது அன்று என்று கழித்துக் காட்டவேண்டும். அந்த வகையில்தான் அருண கிரியார் இதைச் சொல்ல வருகிறார். நாம் அநுபவிக்கும் இன்பம் சில சமயங்களில் உள் இருந்தும் வரும்; சில சமயங்களில் வெளியில் இருந்தும் வரும். அருணகிரியாருடைய அநுபவம் உள் இருந்து வந்ததா? வெளியில் இருந்து வந்ததா? உள் வெளி என்ற பாகுபாடு அதற்கு இல்லை. போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும் இல்லாது ஒன்று வந்துவந்து தாக்கும். போக்கும் வரவுமாகிய இரண்டும் இல்லை என்றபோதே அதற்கு இட எல்லை இல்லை என்பது புலனாயிற்று. இந்த அநுபவம் உடம்போடு சார்ந்த உயிருக்கு ஏற்பட்டது. அது எங்கே இருந்து வந்தது? நினைப்பும் மறப்பும் கடந்த அந்த நிலையில் உடம்பு இருக் கிறது என்றே தெரியாது. மனமும் இருக்கும் இடம் தெரியாமல் நழுவிவிடும். அப்போது உள் எது, வெளி எது என்ற நினைவே ஏற்படாது. உள் என்பது ஒரிடம். வெளி என்று ஒரிடம். இரண்டுக் கும் நடுவில் ஒன்று இருந்தால்தான் அந்த இரண்டும் புலனாகும். நான் என்ற ஒன்று இருந்து அநுபவித்தால் இது உள்ளிருந்து வந்தது, அல்லது இது எனக்குப் புறத்தில் இருந்து வந்தது என்று சொல்லலாம். உள்ளுக்கும், புறம்புக்கும் வேறுபாடு காட்டும் நான் என்பது எப்போது இல்லையோ அப்போது அநுபவத்துக்கு உள்ளும் இல்லை; புறம்பும் இல்லை. 204